மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல இடங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன.
இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பார் வீதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளதனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை
மட்டக்களப்பு மாநகர சபையினால் முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதுடன், மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்ட பகுதிகளின் மின் இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டது.

மட்டக்களப்பின் நகர்ப்பகுதியான கூழாவடி,திசவீரசிங்கம் சதுக்கம்,இருதயபுரம்,கறுவப்பங்கேணி,பூம்புகார்,புதூர்,திமிலைதீவு,சேற்றுக்குடா உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.
இதேபோன்று கல்லடி பகுதியிலும் மரங்கள் முறிந்ததனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதுடன், பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதனால் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காணமுடிகின்றது.
நேற்றைய தினம்(25) மட்டக்களப்பு நகரில் 93.6மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.










