மட்டக்களப்பில் வெள்ள நிலைமையினை குறைக்க ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையினை குறைக்கும் வகையில் பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் வெள்ள நீரை கடலுக்குள் அனுப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசசபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை இணைந்து இந்த பணியை முன்னெடுத்துள்ளன.
கடுமையான மழை
தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் போக்குவரத்துச்செய்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதுடன் இடம்பெயரும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் ஆற்று நீரின் அளவும் அதிகரித்து மக்களின் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ள நிலையில் அவற்றினை குறைக்கும் வகையில் பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ்,போரதீவுப்பற்று பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த.கயசீலன் உட்பட போரதீவுப்பற்று,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர்கள்,ஊழியர்களும் கலந்துகொண்டு இந்த செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.
இதேநேரம் கடுமையான மழைபெய்வதன் காரணமாக போக்குவரத்தினை மேற்கொள்வோர் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை வெல்லாவெளி வீதியில் வெள்ள நீரோட்டம் உள்ள பகுதியில் தடம்புரண்டதினை அவதானிக்கமுடிந்தது. அதன் சாரதி பாதுகாக்கப்பட்டபோதிலும் வாகனத்தினை மீட்பதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.







