மட்டக்களப்பில் நிலவும் சீரற்ற காலநிலை: அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேற்று (09.01.2024) பிற்பகல் வெளிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெய்து வரும் கன மழையினால் மட்டக்களப்பில் 123.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மாநகர சபைக்கு உட்பட்ட சின்ன ஊறணி, இருதயபுரம், கருவப்பங்கேணி, கூழாவடி, மாமாங்கம், கல்லடி, வேலூர், நாவற்குடா உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதையடுத்து ஆலயங்கள் உட்பட பல வீடுகள் வெள்ள நீரில் ழுழ்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்
கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கிரான் பாலத்தின் மேல் வெள்ளநீர் ஓடுவதால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் படகுசேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வாகரைக்கும் கல்லரிப்பு பிரதேசத்துக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து உழவு இயந்திரத்தில் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளத்தினால் செங்கலடி பிரதேச செயலப்பிரிவில் 115 குடும்பங்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 33 குடும்பங்களும், களுவாஞ்சிக்குடியில் 7 குடும்பங்களும், பட்டிப்பளை பிரதேச செயலக் பிரிவில் 10 குடும்பங்களும், போரதீவுபற்று பிரதேச பிரிவில் 290 குடும்பங்களும், வாகரையில் 393 குடும்பங்களும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 1,498 குடும்பங்களும் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
காத்தான்குடியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்கள் பதுரியா வித்தியாலயத்திலும், செங்கலடியில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்கள் ஏறாவூர் கோவில் மணிமண்டபத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுணதீவு ஆற்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடரும் கன மழை காரணமாக மாவட்டத்திலுள்ள பெரிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் ஆற்று வெள்ளம் காரணமாக தாழ்நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |