மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இந்த முறைப்பாட்டினை நேற்றைய தினம்(16) கையளித்துள்ளனர்.
கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதார உரிமைகள்
தாம் பல்வேறு திணைக்களங்களிடம் இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்த போதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதுடன் கடற்றொழிலாளர்களை பாதுகாக்குமாறு கோரியே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமூக செயல்பாட்டாளர் ஜோபின், கடல் வளங்களையும் கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதார உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
எமது முன்னோர்கள் இந்த இயற்கை வளங்களை முறையான வகையில் பயன்படுத்தி, போஷாக்குள்ள உணவோடு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். எமது எதிர்கால சந்ததியினரும், எமது பிள்ளைகளும் இதே போன்றதொரு போஷாக்கான வாழ்வைப் பெற வேண்டுமாயின், எமது கடல் வளங்களையும் நீர்நிலைகளையும் (வாவி வளங்களையும்) பாதுகாக்க வேண்டியது எமது தார்மீக பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.
சட்டவிரோத மீன்பிடி மற்றும் வாழ்வாதார அச்சுறுத்தல் மட்டக்களப்பு வாவி மற்றும் கடல் பரப்புகளில் அண்மைக்காலமாக சட்டவிரோத மீன்பிடி முறைகளும், முறையற்ற செயல்பாடுகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கையெழுத்துக்களுடன் கூடிய விரிவான மனு
கடல் மற்றும் வாவி வளங்கள் வேகமாக அழிவடைந்து வருகின்றன.கடற்றொழிலாளர்களி்ன் அன்றாட வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
எதிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவு முறை இல்லாமல் போகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடற்றொழிலாளர் குழுக்கள், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் பல கட்டக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை என செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாகவே, தங்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்தக் கோரி, இறுதிக் கட்ட நம்பிக்கையாக மனித உரிமை ஆணைக்குழுவை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்றொழிலாளர்களி்ன் கையெழுத்துக்களுடன் கூடிய விரிவான மனு மற்றும் முறையீட்டு ஆவணங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணைக்குழு உரிய தலையீட்டை மேற்கொண்டு, சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்தவும் தங்களது பாரம்பரிய வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்ற பலத்த நம்பிக்கையை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சமூகம் கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan