மட்டக்களப்பின் பொருளாதார அச்சாணிக்கே ஆபத்து..! சபையில் இளையதம்பி சிறிநாத் பகிரங்கம்
மட்டக்களப்பு - மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில் பாரம்பரிய மேய்ச்சல் தரைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
இன்று(21.10.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில் பாரம்பரிய மேய்ச்சல் தரைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் மற்றும், உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும், இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இனவாதத்தால் பொருளாதார சிக்கல்
பெரும்ப போகச் செய்கையின் போது கால்நடைகளை மேய்ச்சல் தரைக்குக் கொண்டு செல்ல முடியாவிட்டால், பால் உற்பத்தியும் விவசாயமும் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பின் பொருளாதார அச்சாணியே தகர்ந்துவிடும் அபாயம் நிலை உருவாகியுள்ளது.

அதே போன்று, ஜனாதிபதியின் வாக்குறுதி, நீதிமன்ற உத்தரவு மற்றும் மாவட்ட மட்டத் தீர்மானங்கள் இருந்தபோதிலும் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள மாடுகள் சுடப்பட்டு காயப்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், மகாவலி அதிகாரசபை, மாவட்ட செயலகம், பொலிஸ் மற்றும் வனவிலங்கு திணைக்களங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றன. இன முரண்பாடும் பாரிய மோதல்களும் ஏற்படுவதைத் தடுக்க ஜனாதிபதியும் அமைச்சர்களும் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.