கிழக்கு மாகாணத்தின் விவசாயத்துறையினை முன்னேற்றும் அரசாங்கத்தின் திட்டம் (Photos)
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாணத்தின் விவசாயத்துறையினை முன்னேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள விவசாய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஓருங்கிணைப்புக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் விவசாய, நீர்பாசனத்துறை அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் 430மில்லியன் ரூபா நிதியுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள நீர்பாசன புனரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைத்து விவசாய நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுக்கவும் நீர்பாசன வசதிகளை அதிகரித்து அதிகளவான விவசாய செய்கையினை முன்னெடுக்கவும் இதன்மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளினால் பல்வேறு கோரிக்கைகள்
முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை
நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்கும் என நீர்பாசனத்துறை
இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.