கைத்துப்பாக்கி வெடித்து பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சிய பொறுப்பாளர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (03.05.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு வீதி ரோந்து கடமைக்காக வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியே இவ்வாறு வெடித்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள் கைத்துப்பாக்கியை ஆயுத களஞ்சிய பொறுப்பாளரிடம் வழங்க முற்பட்டபோது தவறுதலாக கைதுப்பாக்கி வெடித்ததில் களஞ்சிய பொறுப்பாளரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




