2.6 மில்லியன் டொலர் சேமிப்பு திட்டம்..! துறைமுகத்தை வந்தடைந்த மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்
மின்சாரத்தை நிலைப்படுத்துவற்கான ஆறு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) இலங்கை அரசாங்கத்தினால் முதன்முறையாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
160 மெகாவொட் கொள்ளளவு கொண்ட குறித்த ஆறு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage System - BESS), நேற்று(30.05.2026) கொழும்புத் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்
கடந்த 2025ஆம் ஆண்டின் ஜூலையில், இதே கொள்ளளவு கொண்ட 16 மின்கலங்களுக்காக ஒரு சர்வதேசப் போட்டி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது, அதன் ஊடாக தற்போதைக்கு அவற்றில் ஆறு மின்கல அமைப்புகள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த 6 ஆற்றல் சேமிப்பு அமைப்புகளும் மஹவ, வவுனியா, சங்கானை, கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் அமைந்துள்ள மின் பரிமாற்ற துணை மின் நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் ஒவ்வொன்றும் பகல் நேரத்தில் 40 மெகாவொட் மின்சாரத்தைச் சேமிக்கும் திறன் கொண்டது.

மேலும் உச்சபட்ச மின் தேவை ஏற்படும் இரவு நேரத்தில் அதில் 10 மெகாவொட்டை தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த 6 அமைப்புகளின் மொத்தக் கொள்ளளவு 60 மெகாவொட் ஆகும் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆற்றல் சேமிப்பு அமைப்புகள், எரிசக்தி அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டமைப்பு செயற்படுத்துனர் (NSO) நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படவுள்ளன.
அத்துடன், பராமரிப்புப் பணிகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2.6 மில்லியன் டொலர் சேமிப்பு திட்டம்
தற்போது, எரிபொருளைப் பயன்படுத்தி ஒரு யூனிட் (Unit - 1) மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 115 ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் BESS அமைப்புகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஒரு யூனிட்டுக்கு 30 ரூபாய் மட்டுமே செலவாகும் என்று கூறப்படுகின்றது.
இதன்படி, மின்சார சபையின் செலவினம் குறைவதன் காரணமாக நுகர்வோர் எதிர்காலத்தில் அதன் பலன்களைப் பெற முடியும் என்றும், எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய மாதந்தோறும் செலவிடப்படும் 2.6 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி சேமிக்கப்படும் என்றும் அரசாங்கத் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

BESS அமைப்புகள் கரியமில வாயு வெளியேற்றத்தையும் காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்தாது, அதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைக்கப்படும்.
சீனா தனது மின்சாரத்தில் 50% க்கும் அதிகமானதை உற்பத்தி செய்ய BESS அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. மேலும் இந்தத் தொழில்நுட்பம் ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காரணமாகவே நாடு பொருளாதார அபிவிருத்தியடைந்துள்ளது! அமைச்சர் சமந்த வித்தியாரத்ன