தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்!
கடந்தவாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை அரசியலில் கொதிநிலை விவாதத்தை உருவாக்கி உள்ளது.
குறிப்பாக ரணிலின் சலனம், இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தை பொது வெளியில் தோலுரிப்பதாக அமைந்திருந்தது. மறுதலையாக ரணில் தனது இராஜதந்திர உரையாடலால் இலங்கையை சர்வதேச அரங்கில் பாதுகாத்துள்ளார் என்ற வாதங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது.
எனினும் நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, ரணிலின் அவசரமான ஊடக சந்திப்பில் புலி, பூச்சாண்டி மற்றும் பௌத்த சங்கங்களிடம் சரணாகதி உரையாடல்கள், தனது சலனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் நேர்காணலில் ஊடகவியலாளரால் முன்வைத்த பட்டலந்த வதைமுகாம் விவாகரம் தென்னிலங்கை அரசியலில் முதன்மையை பெற்றுள்ளது.
ரணிலின் நேர்காணல்
மாறாக ஈழத்தமிழர்கள் ரணிலின் சலனமான நிலைமைகளை இரசித்ததுடன் கடந்து சென்றுள்ளார்கள். இக்கட்டுரை பட்டலந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுமளவிற்கு, ரணில் விக்ரமசிங்கவின் உரையாடலில் காணப்பட்ட இனப்படுகொலை சாட்சியங்கள் போதிய கவனத்தை பெறாமைக்கான அரசியல் பலவீனங்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச்-06அன்று அல் ஜசீரா (Al Jazeera) எனும் சர்வதேச ஊடகத்தில் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேர்காணல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
குறித்த நிகழ்ச்சியில் ரணிலிற்கு வழங்கப்பட்ட அறிமுகத்தை பதிவு செய்வதே, இலங்கை அரசியலில் அவரின் முக்கியத்துவத்தையும், ஈழத்தமிழர் மீதான இலங்கை அரசாங்கங்களின் ஒடுக்குமுறையில் அவரின் சாட்சியத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள இலகுவானதாக அமையும். ‘ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரச நிறுவன ஆதரவாளராகவே பார்க்கப்பட்டுள்ளார்.
ஒருமுறை ஜனாதிபதியாகவும் ஆறு முறை பிரதமராகவும் நிதி, தொழில் அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சராகவும் 1977ஆம் ஆண்டு முதல் இலங்கை அரச நிறுவனத்தின் அனைத்து பதவிகளையும் வகித்துள்ளார்.
இத்தகையதொரு இலங்கை அரச நிறுவன ஆதரவாளர், இலங்கை அரச நிறுவனத்தின் பலவீனங்களை ஏற்றுக்கொள்வது, அதனூடாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை ஏற்றுக் கொள்வதும் உயர்வான வாக்குமூலமாகும். குறித்த நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் ரணில் பதிலளிக்க முடியாத நிலையில் சலனப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் இலங்கையை வன்முறையற்ற நாடாக குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டுப் போர்
‘ஹிமாலய குன்றிலிருந்து நாம் வன்முறையற்ற ஒரு நாடாகும்’ என்றவாறு குறிப்பிட்டிருந்தார். அதற்கு குறுக்கிட்ட நேர்காணல் செய்பவர், ‘நீங்கள் 26 வருடங்கள் நீடித்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை பற்றி கூறுங்கள்’ என்றவாறு வினா எனுப்பினார். ‘பதில் சொல்லப் போவதில்லை’ என ரணில் மறுதலித்திருந்தார்.
இவ்வாறே உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், பதில் வழங்க மறுத்திருந்தார். இது வெளிப்படையாக இலங்கை அரசாங்கங்களின் பொறுப்புக்கூறலற்ற தன்மையையே வெளிப்படுத்தியிருந்தது. மேலும் பார்வையாளர் தரப்பிலிருந்து 2009ஆம் இறுதிக்கட்ட போரில் இலங்கை அரச இயந்திரம் வைத்தியசாலைகள் மீது குண்டு வீசியது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆரம்பத்தில் நிராகரித்த போதிலும், பார்வையாளர்களிடம் ஏற்பட்ட கூச்சலை தொடர்ந்து வைத்தியசாலைகள் மீதான தாக்குதலை ரணில் ஏற்றுக்கொண்டார். ‘முள்ளிவாய்க்காலில் மருத்துவமனைகள் குறித்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மற்ற சில சம்பவங்களை விசாரணை செய்தோம். கொலைகள் நடந்த சில சந்தர்ப்பங்களில் விமானப்படையின் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கூற முடியாது. போரின் இறுதிக்கட்டத்தில் சில பிரச்சினைகள் இருந்தன, அதனை மறுக்க மாட்டேன்’ என முன்பின் முரணாக கருத்துரைத்தார். ரணிலின் அல் ஜசீரா நேர்காணல், ஒருவகையில் ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிவிசாரணைகளை நியாயப்படுத்துவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணிலை இனப்படுகொலையின் சாட்சியமாக்கியுள்ளது.
எனினும் இத்தகையதொரு விளைவுசார் அரசியலை ஈழத்தமிழரசியலில் அவதானிக்க முடியவில்லை. சமுக வலைத்தளங்களில் மீம்ஸ்களாவும் (Memes - போன்மி), பதிவுகளாகவும் (Status) தமிழ் இளையோர்களின் ஆதங்கமே உயர்ந்தபட்ச விளைவுகளாக அமைகின்றன. அப்பதிவுகள் கடலலையில் இழுத்தடிக்கப்படும் பொருட்கள் போல் புதிய அலையில் இன்னொரு பொருளை காவிச்சென்று விடுகிறன.
அரசியல் விளைவுகளை அறுவடை செய்ய வேண்டிய தமிழ் அரசியல் தரப்பின் உரைகளில் ரணிலின் நேர்காணலும் ஈழத்தமிழர்களின் நலன்களும் போதிய உள்ளடக்கத்தை பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளிடையே ரணில் தொடர்பிலான கடந்த கால விசுவாசம் நிலை பெற்றுள்ளதையே உணர முடிகின்றது. தமிழ் அரசியல் தரப்பிடமிருந்து காத்திரமான எதிர்வினைகள் ரணில் நேர்காணலில் வழங்கிய வாக்குமூலத்துக்கு கிடைக்கப்பெறவில்லை.
குறைந்தபட்சம் நேர்காணலில் ரணில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கூறிய கருத்திற்கு கூட அவர்கள் எதிர்வினையாற்றியிருக்கவில்லை.
இதுவொரு வகையில் ரணிலின் கருத்தை ஏற்பதாகவே அமைகிறது. 2022ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியை தெரிவு செய்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவையே ஆதரித்திருந்தது. இரகசிய வாக்கெடுப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பலரும் தமக்கே வாக்களித்ததாக அன்றைய காலப்பகுதியில் ரணில் குறிப்பிட்டிருந்தார். அதே கருத்தை அல் ஜசீரா நேர்காணலிலும் குறிப்பிட்டிருந்தார்.
‘முக்கியமான தமிழ் உறுப்பினர்களில் சிலரும் எனக்கு வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்தனர். மற்றவர்கள் எனக்கு வாக்களித்தனர்’ எனத் தெரிவித்திருந்தார். ரணிலின் கருத்து பிழையெனில் உறுப்பினர்கள் நிராகரித்திருக்க வேண்டும். நிராகரிப்பற்ற நிலை ஏற்பதாவே அமைகின்றது.
இத்தகைய உறவின் பின்னணியிலேயே ரணிலின் வாக்குமூலங்களை முன்னிறுத்தி உரையாடி, அவரை நெருக்குவாரத்துக்கு தள்ள தமிழ் கட்சிகள் விரும்பவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இயங்கிய கட்சிகளும் உறுப்பினர்களும், தமிழ்த்தேசியத்துக்கு விசுவாசமாக செயற்படுபவர்களாயின், ரணிலின் நேர்காணல் கருத்துக்கு எதிர்வினையாற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
ரணில்-மைத்திரி
2015-2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தோடு இதயத்தால் ஒப்பந்தம் மேற்கொண்டு காதல் கொண்டிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கௌரவ பதவியாகவே காணப்பட்டது. செயற்பாட்டில் அரசாங்க விசுவாசத்தையே வெளிப்படுத்தினார்கள்.
ரணிலுடன் இணைந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கான கால அவகாசத்துக்கான ஆதரவை வழங்கினார்கள். சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். அவ்வாறே 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன்றைய தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர், ‘2005 ஆண்டில் ரணிலின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை அவர்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்’ என ஆதங்கப்பட்டிருந்தார்.
இத்தகைய செயற்பாடுகளும் உரைகளும் ரணில் மீதான தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கையையே எடுத்துக்காட்டுகிறது. எனினும் ரணில், நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டு போரின் அழிவுகளுக்காக தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை நிராகரித்திருந்தார்.
இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் ரணிலின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி, கூட்டாக செயற்பட்டமையின் ஏமாற்றத்தையே குறிக்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏமாற்றம் என்பது அவர்களின் பின்னால் திரட்டப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஒற்றையாட்சி
தமிழ் மக்களை ரணிலின் பின்னால் அழைத்து சென்ற தமிழரசு கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் ரணிலின் பொறுப்புக்கூறலற்ற செயலை கண்டிப்பது தார்மீக கடமையாகும். எனினும் அக்கட்சிகளிடமிருந்து அத்தகைய எந்தவொரு எதிர்வினையும் வரவில்லை. இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளும் ரணிலுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.
மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தேர்தல் மைய கட்சிகளாகவே உள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரச நிர்வாக கட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு, அவ்வொற்றையாட்சி நிர்வாக கட்டமைப்பில் கதிரைகளை நிரப்புவதை இலக்காக கொண்டே செயற்படுகின்றார்கள். மாறாக தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடும் தேசிய இனமாக, ஓர் இயக்கமாக செயற்படும் மனநிலையில் இல்லை.
சமகாலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தென்னிலங்கை அரசாங்கம் விடுத்துள்ள நிலையில், அதற்கு இழுபட்டு இயங்கும் நிலையிலேயே உள்ளனர். அதற்கான கூட்டுக்களை உருவாக்குவதிலேயே முனைப்பாக உள்ளார்கள். மாறாக ரணிலின் நேரலையில் இனப்படுகொலையின் சாட்சியமாக அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடிய சிந்தனை இல்லை.
சமுகவலைத்தளங்களில் இளையோர்களிடம் உருவாகிய ஆதங்கத்திற்கு கூட தமிழ் அரசியல் கட்சிகள் வினையாற்ற தயாராக இல்லை. இது தமிழ் மக்களிடமிருந்து கட்சிகள் விலகியுள்ளமையை உணர்த்துகின்றது. இவ்விலகிலே பொதுத்தேர்தலின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.
வீழ்ச்சியிலிருந்து படிப்பினையை கற்காதவர்களாய், அதேநிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை எதிர்கொள்வதும் தமிழ் கட்சிகளின் தோல்வியையே எதிர்வு கூறுகிறது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தேர்தல் அரசியல் பிழையான உத்தியாக கருத முடியாது. எனினும் விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியல் போராட்டத்தில் தேர்தல் அரசியல் மாத்திரமே உத்தியாக கருத முடியாது. தேர்தல் அரசியல் ஒரு பகுதியே ஆகும். தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறானதொரு போக்குடன் இயங்குவதில்லை.
சர்வதேச விசாரணையை கோரும் ஈழத்தமிழர்களிற்கு, சர்வதேச ஊடகமொன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கான நெருக்கீடு என்பது சாதகமானதாகும். சர்வதேச அரங்கில் வாக்குமூலமாக முன்னிறுத்தக்கூடிய பொறியாக காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியலுடன் சர்வதேச தொடர்பு காணப்படுகின்றதா என்பதை சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தேசிய இனங்கள் சர்வதேச உறவை பேண முடியாதென விலகிட முடியாது. மேற்காசியாவில் குர்துகள் அமெரிக்காவின் ஆதரவை பெற்றுள்ளார்கள்.
பலஸ்தீனிய ஹமாஸ் அணியினர் ஈரான் மற்றும் அதுசார் அணியின் ஆதரவை பெற்றுள்ளார்கள். சர்வதேச உறவு என்பது அணிசேர்க்கையும் அதுசார்ந்த கூட்டு செயற்பாடுகளுமேயாகும். ஈழத்தமிழர்களிற்கு அவ்வாறான, நிலையான சர்வதேச ஆதரவு தளம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டால், தமது வாக்கு பலத்தால் அரசாங்கங்களில் தலையிட்டு, ஈழத்தமிழருக்கு சாதகமான சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ள போதிலும், அவை நிலையான வெளியுறவுக் கொள்கையாக அரச நிகழ்ச்சி நிரலுக்குள் இணைக்க முடியவில்லை.
பட்டலந்த வதைமுகாம்
சர்வதேச அரசியலில் எந்த ஒரு நிலையான ஆதரவையும் உருவாக்காமலேயே, வாய் வீச்சளவில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர், சர்வதேச விசாரணையையும் சர்வதேச நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இது வெறுமனவே அவர்களின் கட்சி அரசியல் நலன் சார்ந்த விடயமாகவே அமைகின்றது. மாறாக தமிழ் மக்களுக்கான தேசிய விடுதலைக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதாக இல்லை.
கிடைக்கும் வாய்ப்புக்களையே தமிழ் கட்சிகள் தொடருவதில்லை. எனினும் தென்னிலங்கை அரசாங்கம் நேர்காணலில் தமக்கு சாதகமானவற்றை தூக்கி, நேர்காணலின் இலக்கை பட்டலந்த விவகாரத்துக்குள் சுருக்கியுள்ளது. தொடர்ந்து 25 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட பட்டலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை தூசி தட்டப்பட்டுள்ளது.
தென்னிலங்கை அரசியலில் பூதாகரமான விவாதத்தை உருவாக்கிருந்தது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதுவொருவகையில் நேர்காணலில் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடியை தளர்த்து போகச் செய்யும் தென்னிலங்கை செயற்பாடாகவே அமைகின்றது.
நேர்காணலில் இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் பேசுபொருளாகிய ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் உள்நாட்டு போரின் விளைவுகளுக்கான பொறுப்புக்கூறல் என்பனவே பிரதானமாகியது. அவற்றிற்கு இலங்கை அரசே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இவ்விடயங்கள் மையப் பேசுபொருளாகுவது சமகால அரசாங்கத்திற்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகும். ஆதலாலேயே தென்னிலங்கை அரசாங்கம் தம்மை பாதுகாத்து கொள்ள, நேர்காணலை ரணில் மீது குற்றச்சாட்டை முன்னிறுத்தி பட்டலந்த விவகாரத்துக்குள் மாத்திரம் சுருக்கியுள்ளனர்.
எனினும் இதுவும் நிலையான முடிவை நோக்கி நகரப்போவதில்லை. பட்டலந்த விவகாரத்துக்கான முடிவு, ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கும். ஆதலால் தென்னிலங்கை அரசாங்கம் அதனை தீர்க்கமான முடிவுக்குள் நகர்த்தப் போவதில்லை என்பதே நிதர்சனம். தமிழ் அரசியல் கட்சிகள் ரணிலுக்கான விசுவாசத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் மக்களுக்கான விசுவாசத்துடன் பட்டலந்த விவகாரத்திற்கான தீர்வை பெற உந்துவது அவசியமானதாகும்.
எனவே, ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவிற்கு வழங்கிய நேர்காணல் சமுக வலைத்தளங்களில் இளையோர்களால் கொண்டாடப்பட்ட அளவிற்கு, தமிழ் அரசியல் கட்சிகளால் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சர்வதேச விசாரணை எனும் கோரிக்கையை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், சர்வதேச ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு சார்பாக கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தை பலப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.
இது ஈழத்தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது. தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை செய்யாது, தென்னிலங்கை எஜமான்களை குளிர்விப்பதாகவும் - தமது அதிகார நலன்களுக்காவும் - குடும்ப கௌரவத்திற்காகவும் அரசியல் செய்யின், ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாகவே அமையக்கூடியதாகும்.