பட்டலந்த அறிக்கையுடன் தொடர்புற்ற நான்கு அறிக்கைகள்.. பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கையைப் போன்று அதனுடன் இணைந்த நான்கு பிரதான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10.04.2025) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், "பட்டலந்த விவகாரத்தில் ஒருசில விடயங்களை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சம்வத்தையும் மறக்க முடியாது.
பிள்ளையான் கைது..
1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மக்களின் தேர்தல் உரிமை கொள்ளையடிக்கப்பட்டு, யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இதன் பின்னரே 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்றது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் தூண்டிவிடப்பட்டது.
இதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது. ஜே. ஆர். ஜயவர்த்தன - பிரேமதாச அரசு இந்த நாட்டின் இளைஞர்களைப் படுகொலை செய்தது. இதில் பிரதான ஒன்றாகத்தான் பட்டலந்த சித்திரவதை முகாம் உள்ளது.
எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இந்த சித்திரவதை முகாம் மற்றும் படுகொலையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றார்கள். பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கையைப் போன்று அதனுடன் இணைந்த நான்கு பிரதான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உரிய நடவடிக்கை
சமீபத்தில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானைக் குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். அவர் தற்போது தடுப்புக் காவலில் உள்ளார். உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் அவரைத் தொடர்புபடுத்தும் கணிசமான தகவல்கள் உள்ளன.
இது அவரது ஈடுபாட்டைக் குறிக்கின்றது. விசாரணைகள் நடந்து வருகின்றன. எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
எந்தவொரு குற்றவாளியும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மாட்டோம். நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது கட்டாயமாகும். நீதி மேலோங்க வேண்டும். இதை அடையத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |