பலன் தரக்கூடிய கன்றுகள் மூலம் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - பாஸ்கரன் கந்தையா
என் இனத்தின் சந்ததிகள், மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தேடிச் சென்று, அவர்களைப் பலப்படுத்தவும் அவர்கள் இருப்பை உறுதி செய்யவும் என்னென்ன உதவிகளை வழங்கலாம் என்று பார்க்க வேண்டும் என பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டிப் பகுதியை அண்டிய தமிழ் கிராமங்களைத் தேடிய எமது பயணத்தில், இன்னுமொரு கிராமத்துக்குச் சென்றோம். அது முத்துக்கள். முத்துக்கள் தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்துக்குச் சென்று, சுமார் 150 கறுவாக் கன்றுகளை மாணவர்களின் கைகளிலேயே ஒப்படைத்தோம்.
மூன்று ஆண்டுகளில் பலன் தரக்கூடிய இந்தக் கன்றுகள் மூலம் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கன்று கொடுப்பதால் எப்படி மாற்றம் வரும் என்று கேட்கலாம். ஒவ்வொரு கன்றிலிருந்தும் விதைகள் கிடைக்கும். அந்த விதைகளிலிருந்து மேலும் கன்றுகளை உருவாக்கலாம். இப்படியே அவை பெரிய அளவில் பரந்து வியாபிக்கும்.

துர்ப்பாக்கிய நிலை
அதுபோலத்தான், ஈழத்துத் தமிழ் உறவுகளாகிய நாங்கள் இங்கிருக்கிறோம், உங்களோடு இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதும். தமிழ் கிராமங்களில், தமிழ் பேசும் நிலப்பரப்பில் வாழும் மக்களைப் போலன்றி, எல்லாவற்றுக்கும் இலங்கையின் சகோதர மொழி பேசுகின்ற சமூகத்தை அண்டி வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இடர்களை இவர்கள் எதிர்கொள்ளும் விதமும், தங்களைத் தற்காத்துக் கொள்ளப் போராடும் மனவுறுதியும் எனக்கு வியப்பாக இருந்தது. பல இடர்பாடுகளுக்கு மத்தியில்தான் அங்கு வாழ்கிறார்கள். தங்களைச் சுதாகரித்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஆகவே நாம் செய்ய வேண்டியது, நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று சொல்வது மட்டுமல்ல. நம்மால் இயன்ற வகையில் அவர்களுக்குக் கை கொடுக்க வேண்டும்.

அவர்கள் தனித்து நிற்கக்கூடிய ஒரு பலமான கட்டமைப்பாகத் தங்களை உருவாக்கிக் கொள்ளத் தேவையான பலத்தை நாம் கொடுக்க வேண்டும். என் இனத்தின் சந்ததிகள், மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தேடிச் சென்று, அவர்களைப் பலப்படுத்தவும் அவர்கள் இருப்பை உறுதி செய்யவும் என்னென்ன உதவிகளை வழங்கலாம் என்று பார்க்க வேண்டும்.
நம்பிக்கையை உருவாக்குதல்
இவை எல்லாவற்றுக்கும் அப்பால், அவர்களைக் கவனித்துக் கொள்ள அவர்களின் உறவுகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குவதே எனது மிக முக்கியமான நோக்கம். அந்த அடிப்படையில் இந்தப் பயணம் மிகச் சிறப்பாக அமைந்தது. மாணவர்களோடும் பெற்றோர்களோடும் பேச முடிந்தது.

அவர்கள் தங்கள் வலிகளையும் கவலைகளையும் சொன்னார்கள். இயன்றவரை அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவோம் என்று சொல்லியிருக்கிறோம். தேவைகளோடு இருக்கும் இந்தப் பாடசாலைச் சமூகத்துக்கும், இந்த மாணவர்களின் வளர்ச்சிக்கும் உதவ விரும்புபவர்கள், கீழ்க்காணும் இலக்கத்துக்கு அழைப்பு எடுத்து, உங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கலாம்.
(77) 166 9900 நீங்கள் செய்த உதவி குறித்து ஐபிசி தமிழைத் தொடர்பு கொண்டு (0779490134 ) விவரங்களைத் தெரிவித்து உறுதிப்படுத்துவது, எதிர்காலச் சிரமங்களைத் தவிர்க்கவும், உதவிகளை ஒருங்கிணைக்கவும் துணையாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆகவே இந்த இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு உதவுபவர்கள், உங்கள் உதவி குறித்து ஐபிசி தமிழிடமும் உறுதிப்படுத்துமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
