பசில் ராஜபக்சவின் பரிதாப நிலை
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்துள்ளன.
மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவால் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேக நபரான பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என்று சட்டத்தரணி அனில் டி சில்வா மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்தார்.
பசிலின் உடல்நிலை
தனது கட்சிக்காரர் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதிலும், அவர் தனியாகப் பயணம் செய்யும் உடல்நிலையில் இல்லாததாலும், விமானப் பயணத்தின்போது அவரது நிலைமை மோசமாகலாம் என விமான நிறுவனங்கள் சந்தேகித்ததாலும், விமான நிறுவனங்களிடமிருந்து பொறுப்பை ஏற்க அவர் விரும்பவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்தக் காரணத்தினாலேயே, விமான நிறுவனங்கள் தங்கள் கட்சிக்காரரை விமானத்தில் ஏற்ற மறுத்து வருவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ச தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதால், மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க திசாநாயக்க, சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை கருத்தில் கொண்டு, பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
காணி கொள்வனவு
மாத்தறையின் பிரவுன்ஸ் ஹில் பகுதியில் முறைகேடாகச் பெற்றுக்கொண்ட பணத்தைப் பயன்படுத்தி காணி கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அவரது மனைவியின் சகோதரி அயூம கலப்பத்தி மற்றும் அவரது கணவர் திஸ்ஸ கலப்பத்தி முதித ஜயகோடி ஆகியோருக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிவரும் ஜூலை 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.