ரணிலுக்கு வலுக்கும் மொட்டு கட்சியின் எதிர்ப்பு: இடையில் சிக்கிய பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது தொடர்பில் கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதியுடன் முரண்படப் போவதில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சு பதவி வழங்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஜனாதிபதிக்கான ஆதரவினை மீள பெற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை
எனினும் தங்களது கருத்துக்கு ஜனாதிபதி முக்கியத்துவம் வழங்கவில்லை என்றால் அவருடன் இணைந்து செயல்பட முடியாது என இதன்போது சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மேலும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறித்து அவர்கள் இதன்போது அதிருப்தி வெளியிட்டுள்ளனர் .
இதற்கு பதிலளித்த பசில், கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையின் அடிப்படையில் செயல்படுவதனால் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
மேலும் மக்கள் ஆணைக்கு புறம்பான வகையில் ஜனாதிபதி செயற்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
