பசில் ராஜபக்சவிற்கு விடுதலை! - ஜனாதிபதி வாழ்த்து (செய்தி தொகுப்பு)
நிதி மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில், திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2 கோடியே 94 லட்சம் ரூபா நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முகத்துடனான துண்டு பிரசுரங்களை அச்சிட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.