வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி! கட்டாயமாக்கப்படும் காப்புறுதி
வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள பணத்திற்கு ஆபத்து என பல தரப்பினரும் கூறிவந்த நிலையில் இந்த விடயம் சர்ச்சை நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வங்கிகள் விசேட நியதிகள் சட்டம்
மேலும் தெரிவிக்கையில், வங்கிகள் விசேட நியதிகள் சட்டமானது முழு நாட்டினதும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் இதன்மூலம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
முன்பு இல்லாத வகையில் பலமான சட்ட ஏற்பாடுகளை தயாரித்து அதனை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எமது நாட்டில் 5 கோடியே 72 இலட்சம் வங்கி வாடிக்கையாளர்கள் காணப்படுகின்றனர்.
அவர்களின் 15 டிரில்லியன் ரூபா நிதி வைப்பிலடப்பட்டுள்ளது. அந்த நிதி பாதுகாக்கப்பட வேண்டும். அதன் பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டன.
வாடிக்கையாளர்கள் முகங்கொடுக்க நேரும் நிலை
சில நிதி நிறுவனங்கள் பலவீனமடையும் போது வாடிக்கையாளர்கள் முகங்கொடுக்க நேரும் நிலையை நாம் கடந்த காலங்களில் அவதானித்துள்ளோம்.
அந்த வகையில் இப்புதிய சட்டத்தின் மூலம் நிதிநிறுவனங்கள் அவ்வாறு பலவீனமடையமானால் மத்திய வங்கியானது அதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
முறையான வேலைத்திட்டத்தை மத்திய வங்கியால் அது தொடர்பில் முன்னெடுக்க முடியும். அந்தவகையில் அனைத்து வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாப்பதற்கு காப்புறுதியொன்று நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
இந்தச் சட்டத்தின் மூலம் அதனை மேற்கொள்ள முடியும். வங்கி வாடிக்கையாளர்களும் அவர்கள் வைப்பிலிடும் பணமும் இதன்மூலம் பாதுகாக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |