பௌத்த துறவி போல் வேடமணிந்து இலங்கைக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டு பிரஜை கைது
பௌத்த துறவி போல் வேடமணிந்து இந்தியாவில் தங்கி, போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைய முயன்ற பங்களாதேஷின் பிரஜை ஒருவர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18.07.2023) கைது செய்யப்பட்ட அவர், பங்களாதேஷைச் சேர்ந்த அபுர் பர்வா (22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து சந்தேகத்திற்குரிய சான்றிதழ்களைக் கண்டறிந்த பின்னரே அவர் குடிவரவுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை

இவரிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த கடவுச்சீட்டு போலியானது என கூறப்பட்டுள்ளது.
மேலும் இவர் ஒரு வருடத்திற்கு முன்னர் கர்நாடகாவில் ஒரு ஆசிரமத்தில் மாறுவேடத்தில் குடியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் அங்கு தங்கியிருந்தபோது, கர்நாடகாவில் வசிப்பதாகக் கூறி தனது பெயரில் போலி கடவுச்சீட்டை பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் அறியப்படுகிறது.
இந்த நிலையில் அவர் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெற்றுவருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் |