கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்! பங்களாதேஷின் அதிரடி உத்தரவு
அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு பங்களாதேஸ் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தொலைக்காட்சி சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
இன்றையதினம்(5) தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மானை நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த முடிவிற்கு எந்த நியாயமான காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இதனால் பங்களாதேஸ் மக்கள் “மிகவும் காயமடைந்து, அதிர்ச்சி அடைந்து, கோபமடைந்துள்ளனர்” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே ஐபிஎல் ஒளிபரப்புகளை நிறுத்தும் உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் (இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ள) பங்கேற்க பங்களாதேஸ் அணியை அனுப்ப முடியாது என பங்களாதேஸ் கிரிக்கெட் பேரவை (BCB) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு குறித்த கவலைகள்
இந்தியாவில் விளையாடுவதில் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பதே இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாட்டை பங்களாதேஸ் கிரிக்கெட் பேரவை நேற்றையதினம்(4) அனுப்பிய மின்னஞ்சல் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு பயணம் செய்வது சாத்தியமில்லை என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பங்களாதேஸ்அணியின் போட்டிகளை வேறு ஒரு நாட்டிற்கு மாற்றுமாறும் பங்களாதேஸ் கிரிக்கெட் பேரவை விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.