பங்களாதேஷில் வன்முறைகள் தீவிரம்! 35 ஆண்டுகளில் முதல்முறையாக நடைபெறாத விடயம்
பங்களாதேஷின் முன்னணி ஆங்கில நாளிதழான 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star) மற்றும் பெங்காலி நாளிதழான புரோதம் ஆலோ' (Prothom Alo) ஆகியவற்றின் அலுவலகங்கள் மீது போராட்டக்காரர்கள் நடத்திய கொடூரமான தாக்குதல் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து அகற்ற உதவிய மாணவர் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஷரீப் உஸ்மான் ஹாதி (Sharif Osman Hadi), துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்தது.
35 ஆண்டுகளில் முதல்முறையாக
நேற்று(18) வியாழக்கிழமை நள்ளிரவு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் இந்த அலுவலகங்களுக்குள் புகுந்து சூறையாடியதுடன், கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.

இந்தத் தாக்குதலின் போது அலுவலகத்திற்குள் சிக்கிய 28-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், புகை மண்டலத்திற்கு நடுவே "சுவாசிக்க சிரமப்பட்டு தவித்ததாக" (Gasping for air) தங்களது அனுபவங்களை அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
கட்டடத்தின் மொட்டை மாடியில் பல மணி நேரம் தஞ்சம் புகுந்த அவர்களை, ராணுவத்தினர் வந்து மீட்டுள்ளனர்.
இதனால் 35 ஆண்டுகளில் முதல்முறையாக 'தி டெய்லி ஸ்டார்' நாளிதழ் தனது அச்சுப் பதிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட முடியாமல் போனது.
உண்மையின் மீதான தாக்குதல்
இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ள நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, "பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் என்பது உண்மையின் மீதான தாக்குதல்" என்று கூறியுள்ளது.

மேலும், உயிரிழந்த மாணவர் தலைவர் ஹாதியின் நினைவாக சனிக்கிழமை (டிசம்பர் 20) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பெப்ரவரி 12-ம் திகதி பங்களாதேஷில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஜனநாயக மாற்றத்தைத் திசைதிருப்ப இத்தகைய வன்முறைகள் ஏவப்படுவதாக அரசு எச்சரித்துள்ளது.
தற்போது வன்முறை நடந்த பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam