களனி பாலம் தொடர்பான சர்ச்சை முற்றிலும் பொய்யானது: பந்துல குணவர்தன விளக்கம்
புதிய களனி பாலத்தில் ஆணிகள் கழற்றப்படவில்லை, அவற்றை இலகுவாக கழற்றி விடவும் முடியாது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருடப்பட்ட பொருட்களின் மொத்த இழப்பு அறுபது இலட்சம் மாத்திரமே அன்றி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (19.07.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கில் நட்டம் இல்லை
மேலும் தெரிவிக்கையில், களனி பாலத்தின் ஆணிகள் கழற்றப்பட்டதாக கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானது.
பாலத்தின் மேல்தளத்தில் பிவிசி குழாய்கள், தகவல் அமைப்பின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளின் வெளிப்புற பாகங்கள், பாலத்தில் கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் ஆகியனவே திருடப்பட்டுள்ளன.
பீவிசி குழாய்கள் திருடப்பட்டதால் 40 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டி உதிரிபாகங்கள் திருடப்பட்டதால் 0.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றும், கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் திருடப்பட்டதால் 10 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த இழப்பு அறுபது இலட்சம்.
ஆணி அடிக்கும் ஒரு அறிக்கை
புதிய களனி பாலத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படவில்லை. ஆணிகள் அகற்றப்படவில்லை. அவற்றை இலகுவாக கழற்ற முடியாது.
ஆணிகளை அகற்ற பொறியியல் நிறுவனம் சிறப்பு உபகரணங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் பாலம் ஆபத்தில் இருக்கும். இது வெறும் ஆணி அடிக்கும் ஒரு அறிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |