கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த! வெளியான காரணம்
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக நேற்று இரவு (10.3..2023) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்துகம நீதிமன்றில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மகிந்தானந்த அளுத்கமகே தனது வெளிநாட்டு பயணத்தை இரத்து செய்துள்ளார்.
வெளிநாட்டு பயணத்தடை
எனினும், தமக்கு எதிராக மத்துகம நீதிமன்றத்தினால் அவ்வாறான எந்தவொரு வழக்கோ அல்லது வெளிநாட்டு பயணத்தடையோ விதிக்கப்படவில்லை என மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று அறிவித்துள்ளார்.
தரவு அமைப்பில் ஏற்பட்ட பிழை
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிக்கையில், தரவு அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாகவே இவ்வாறான பிழை ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், உண்மையில் இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவரை விசாரணைகள் முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்ய குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமவுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததன் பின்னர் குறித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் தரவுகள் தொடர்பான முறைமையில் ஏற்பட்ட பிழையை சரிசெய்து இன்று (11) வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.