கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்தொலைபேசி திருடப்பட்டதா..! வெளியாகியுள்ள தகவல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் கைத்தொலைபேசி திருட்டு தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவ்வாறான திருட்டுக்கான ஆதாரம் எதுவும் பதிவாகவில்லை என கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் ஆரம்பம்
மேலும் கூறுகையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையடக்கத் தொலைபேசி ஒன்று காணாமல் போனதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.
விமான நிலையத்தின் சிசிடிவி கமராக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதுவும் பதிவாகவில்லை.
குறித்த நபர் மத்திய கிழக்கு நாட்டில் உள்ள குடிவரவு விமான நிலையத்தில் தங்கியிருந்த போது, தற்போதுள்ள பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் அவரது கையடக்கத் தொலைபேசி பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அந்தநாட்டின் விமான சேவைகள் நிறுவனம் எழுத்து மூலம் தமக்கு தெரியப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், உரிய விசாரணைகள் இன்றி சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டமையினால் விமான நிலையத்தின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அது நிறைவடைந்தவுடன் அங்கு பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
