ஒருவார காலத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! வெளியான அறிவிப்பு
ஒரு வார காலத்துக்கு வாகனங்களினூடாகவோ அல்லது நடைப் பயணமாகவோ பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவுகள்
இதற்கமைய ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகும் வரையிலான காலப்பகுதி மற்றும் அதன் பின்னரான காலப்பகுதி உள்ளடங்களாக ஒரு வார காலத்துக்கு இவ்வாறு பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்ட ஒழுங்கு
தேர்தலுக்குப் பின்னரும் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எனவே, சட்ட ஒழுங்கை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நடைமுறையிலுள்ள சட்டங்களை மீறும் பட்சத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட ஒழுங்கை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களும், கலகத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களும் தேவைக்கேற்ப கடமையாற்றியிருப்பதாலும், பொலிஸ் வீதித் தடைகள் நடைமுறையில் உள்ளதாலும், முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
119
118
107 (வடக்கு, கிழக்குக்கு மட்டுமானது)
011 202 7149
011 201 3243
111 239 9104 – (பெக்ஸ் எண்)