நாடகக்கலைஞர் பாலசிங்கத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு அரங்கம்
நாடகக்கலைஞர் பாலசிங்கத்தின் (பாலா மாஸ்டர்) இரண்டாம் ஆண்டு நினைவு அரங்கம் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நினைவு அரங்கமானது இன்று (27.04.2024) இடம்பெற்றுள்ளது.
நியாயமான கூலி
இவர் எண்பதுகளின் தொடக்க காலகட்டத்தில் கிராமிய உழைப்பாளர் சங்கத்தை நிறுவி அதனூடாக கூலி விவசாயிகளின் நியாயமான கூலிக்கான போராட்டங்களையும், பெண்களுக்கு சம கூலி வழங்கப்பட வேண்டும், சாதிய வேறுபாடுகள் களையப்பட வேண்டும், ஆலயங்களுக்குள் அனைத்து சாதியினரும் வழிபட வழிவகை செய்ய வேண்டும் போன்ற வர்க்கப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
நிலமற்றவர்களுக்கு நிலம் வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து நிலமற்றவர்களை நிலமுள்ளவர்ளாக ஆக்கியவர். பின்னர் தேசிய விடுதலைப்போராட்டத்தில் தனது கலைப்பங்களிப்பை வழங்கி மக்களை அணிதிரட்டும் பணியை மேற்கொண்டவர்.
யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின்னர் வன்னிக்கு தனது குழுவுடன் இடம்பெயர்ந்து உடையார் கட்டில் பண்பாட்டுக்கிராமம் ஒன்றை அமைத்து வன்னி மக்கள் மத்தியில் தெரு வெளிநாடகங்களை தொழில்முறையாக செய்து வந்தவர்.
யுத்தகாலகட்டத்தில் வன்னி வீதியெங்கும் தனது நாடகக் குழுவுடன் சைக்கிள்களில் பல நூறு மைல்தூரம் தொடர்ச்சியாகப் பயணித்து மக்களை விடுதலைக்காக அணிதிரட்டியவர். 2022 மே மாதம் இயற்கை எய்தினார்.
நாடகங்கள்
குறித்த நினைவரங்கில் கலாநிதி சிறிகணேசன், ரொசாங்கன், அ. நாகரத்தினம் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினார்கள்.
மேலும் ஒடுக்கப்பட்டோரின் ஆயுதமாக அரங்கு என்ற தலைப்பில் கலாநிதி தே.தேவானந்த் உரை நிகழ்த்தியுள்ளார். கிராமிய கலைகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் புதுவை அன்பின் உரையாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேவை, சத்திரிய தர்மம் நாடகங்களும் மேடையேற்றப்பட்டுள்ளன.