உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர்
திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், நேற்றுமுன்தினம் (14) முதல் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (15) மாலை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை டொக்கியாட் கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோத கட்டுமானங்களை மேற்கொண்டமை மற்றும் புத்தர் சிலையை வைத்து அமைதியற்ற சூழலை உருவாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 11 பேருக்கு எதிராக துறைமுக பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பான விசாரணையின் போது, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 பிக்குகளும் 5 சிவிலியன்களுமாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
நீண்ட நேரப் பேச்சுவார்த்தையின் பின்
சிறையில் அடைக்கப்பட்ட பிக்குகளில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மாத்திரம் உணவு மற்றும் நீரைத் தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
"கரையோர பாதுகாப்புத் திணைக்களம் ஏனைய இடங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரைக்கு எதிராக மட்டும் ஒருதலைப்பட்சமாகச் செயற்படுகிறது" எனக் குற்றம் சாட்டியே அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

நீதிமன்ற விசாரணையின் போது, குறித்த கட்டுமானங்கள் சட்டவிரோதமானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், குறிப்பிட்ட காணியில் மேசை ஒன்றின் மீது புத்தர் சிலையை வைப்பது கரையோரப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகாது என எதிர்தரப்பில் வாதிடப்பட்டதுடன், வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவர விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் அவர்கள் நிராகரித்திருந்தனர்.
தேரரின் போராட்டத்திற்கு ஆதரவாக தென்பகுதியிலிருந்து ஊடகவியலாளர்களும் முக்கியஸ்தர்களும் திருகோணமலைக்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை 6.00 மணியளவில் புல்மோட்டை அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவங்ஸ நாயக்க தேரர் சிறைச்சாலைக்குச் சென்று பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் கலந்துரையாடினார்.
நீண்ட நேரப் பேச்சுவார்த்தையின் பலனாக, கஸ்ஸப தேரர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |