சர்ச்சையை ஏற்படுத்திய அநுராதபுர மோதல் - கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின
அநுராதபுரம், ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் பௌத்த பிக்குகளின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தடயவியல் மருத்துவ பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு அறிவிப்பு
நீதித்துறை மருத்துவ அதிகாரி இது குறித்து பொலிஸாருக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக அநுராதபுர தலைமையக பொலிஸ் ஆய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதிஅநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் பலாங்கொடை கஸ்ஸப தேரர் தலைமையிலான பிக்குகள் ருவன்வெலிசாயவிற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த இடத்திற்கு ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான மற்றொரு குழுவினர் வருகை தந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்திருந்தது.
இந்த மோதலின் போது தடிகளால் தாக்கப்பட்டதில் ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலையில் பலத்த காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கஸ்ஸப தேரரின் மனநல அறிக்கை
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டமை, தாக்குதல் நடத்தியமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகளும், மூன்று பொதுமக்களும் பொலிஸாரால் கைது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கும் போதைப்பொருள் பரிசோதனை நடத்துமாறும், பலாங்கொடை கஸ்ஸப தேரரின் மனநல அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பான சுமார் 100 காணொளிகளை ஆய்வு செய்ய விசேட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.