பிணைக்காக நீதிமன்றத்தை நாடிய பலாங்கொட கஸ்ஸப தேரர்! நீதிமன்றத்தின் அதிரடி முடிவு..
அனுராதபுரம் ருவன்வெலிசாய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகளுக்கு பிணை கோரி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை அநுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.
அநுராதபுரம் ருவன்வெலிசாய தானசாலை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மீண்டும் விசாரணை
இதன்போது, மற்றொரு குழுவினருடன் அத்துமீறிப் பிரவேசித்து குழப்பமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் ராஜாங்கனே சத்தாரதன எனப்படும் காவியுடை அணிந்த நபர் தாக்கப்பட்டு காயமடைந்தார்.

பௌத்த சாசனத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குறித்த நபரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஐந்து பிக்குகளுக்கும் பிணை வழங்குவது தொடர்பான விடயங்களை முன்வைப்பதற்காக வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்டத்தரணி காலிங்க ரவீந்திர நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
எனினும், அந்தக் கோரிக்கையை அநுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன நிராகரித்துள்ளார்.
பலாங்கொட கஸ்ஸப, கஹட்டகஸ்திகிலிய விஜித, பலாங்கொட அனுருத்த, பிலிமத்தலாவே ரேவத மற்றும் தெனியாய சோரத ஆகிய ஐந்து பிக்குகளுக்காகவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த பிக்குகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதான நீதவான், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இதேவேளை, குறித்த பிக்குகளுக்கு மேலதிகமாக பெண் ஒருவர் உட்பட மூன்று பொதுமக்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையே நீதவான் நிராகரித்துள்ளார்.