பஹ்ரைன் வெடிப்புச் சம்பவம்: அமெரிக்காவின் பெட்ரியட் ஏவுகணையே காரணமென தகவல்
பஹ்ரைனில் கடந்த மார்ச் 9ஆம் திகதி அதிகாலை வேளையில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில், அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் 'பெட்ரியட்' (Patriot) ரக ஏவுகணைத் தடுப்பு அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பஹ்ரைனின் சித்ரா தீவில் உள்ள மஹாசா குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில் 32 பொதுமக்கள் காயமடைந்ததோடு, பல வீடுகளும் பலத்த சேதமடைந்தன.
பஹ்ரைன் தரப்பு விளக்கம்
முதலில் இந்தத் தாக்குதலுக்கு ஈரானிய ட்ரோன்களே காரணம் என்று அமெரிக்க மத்திய கட்டளை (US Central Command) தெரிவித்திருந்தது.
இருப்பினும், தற்போது பஹ்ரைன் அரசு முதன்முறையாக அந்தச் சம்பவத்தின் போது பெட்ரியட் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது.

ஈரானிய ட்ரோனை நடுவானில் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், அதன் மூலமே இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும் பஹ்ரைன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், விலையுயர்ந்த ஏவுகணைகளைக் கொண்டு மலிவான ட்ரோன்களைத் தடுக்கும் போது ஏற்படும் இத்தகைய விபத்துகள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.