பதுளை பேருந்து விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்
பதுளை, துன்ஹிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.
சந்தேகநபர் சனிக்கிழமை (02) தப்பிச்சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜாஎல அலெக்சாண்டர் மாவத்தையில் வசிக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவரே வைத்தியசாலை விடுதியிலிருந்து இரகசியமாக தப்பிச்சென்றுள்ளார்.
பேருந்து தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை
நேற்று முன்தினம் (01) காலை பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சியை கடந்து அம்பகஹஓய பிரதேசத்தில் பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதில் பேருந்தில் பயணித்த மூன்று விரிவுரையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில், இலக்கம் 9, 10, 15 இல் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
6 பேரின் நிலைமை கவலைக்கிடம்
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பேருந்து விபத்து தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதா அல்லது கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பேருந்து தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |