சீரற்ற காலநிலை.. யாழ். மாவட்ட நிலவரம்
கற்கோவளத்தில் 386 குடும்பங்களுக்கு இன்றும் உணவு வழங்கல்..!
தற்போதைய சூறாவளி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் பகுதியில் கற்கோவளம் மகாவித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 15 குடும்பங்கள் உட்பட உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள மற்றும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ள 386 குடும்பங்களை சேர்ந்த 1257 பேருக்கு காலை மற்றும் மதிய உணவுகள் வழங்கிவைக்கப்பட்டன.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருலிங்கநாதனின் நேரடி கண்காணிப்பில் அரசால் ஒதுக்கப்பட்ட அனர்த்த நிதியிலிருந்து வடமராட்சி வடக்கு பிரதி பிரதேச செயலர் தயானந்தன், கணக்காளர் ஆகியோர் நேரடியாக சென்று சமைத்த உணவுகளை வழங்கிவைத்தனர்.
குறித்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக கிராம அலுவலர் சிவாசினி , சமுர்த்தி உத்தியோகத்தர் பத்தமராசா உட்பட பலர் மக்களுக்கான சேவைக்காக 24 மணிநேர கடமையில் உள்ளனர்.
புங்குடுதீவு மக்களும் பாதிப்பு
சீரற்ற காலநிலையால் யாழ். வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட புங்குடுதீவு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களில் 22 குடும்பங்களை சேர்ந்த 62 நபர்கள் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் உள்ளிட்டவர்கள் பதிக்கப்ட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.
சந்நிதியான் ஆசிரமத்தால் நிவாரணம்
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை, கேப்பாபுலவு மாதிரி கிராமம், பிளக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட் 40 குடும்பங்களுக்கு 160,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், கேப்பாபுலவு - 102 கிராமசேவையாளர் முஹமது ராஸித், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தகவல் - எரிமலை
குறிகாட்டுவான் இறங்குதுறை
குறிகாட்டுவான் இறங்குதுறை தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
குறித்த பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் சென்று பார்வையிட்டிருந்தார்.
அத்தோடு நயினாதீவுக்கு வாகனங்களை ஏற்றிச்செல்லும் புதிய பாதைக்கான கட்டுமானப்பொருட்கள் இன்றையதினம் குறிகாட்டுவானிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனையும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டிருந்தார்.
தகவல் - தீபன்
வத்திராயனில் பல இடங்கள் நீரில் மூழ்கின
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற கால நிலை தொடர்ந்து வருவதால் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வத்திராயனில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். கிணறுகளிலும் நீர் நிரம்பி வழிவதால் அப்பகுதி மற்றும் ஏனைய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் - எரிமலை










