சீரற்ற காலநிலை! மட்டக்களப்பு மாவட்ட நிலவரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மட்டக்களப்பு - திருகோணமலை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம், உள்ளூராட்சி திணைக்களங்கள், நீர்ப்பாசன திணைக்களம் உட்பட பல்வேறு திணைக்களங்களும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியான எச்சரிக்கையினை விடுத்துவருகின்றது.
அவதானமாக இருங்கள்
தொடர்ந்து காற்றுடன் மழைபெய்துவருவதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறும் வீடுகளில் தங்குவோர் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலையும் கடும் காற்றுடன் கூடிய மழைபெய்ததன் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல இடங்களில் மரங்கள் முறிந்துவீழ்ந்த நிலையில் அவற்றினை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர்செய்யும் பணிகளை உள்ளூராட்சி திணைக்களங்கள் முன்னெடுத்தன.
மட்டக்களப்பு நகருக்குள் வரும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக மக்கள் போக்குவரத்துச்செய்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் பிள்ளையாரடி தொடக்கம் தன்னாமுனை வரையிலான பகுதியின் ஊடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அதன் ஊடாக பயணிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதேபோன்று மட்டக்களப்பு நகரின் பல வீதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் போக்குவரத்துகளை முன்னெடுப்பதை காணமுடிகின்றது.
அத்துடன் வவுணதீவு - மட்டக்களப்பு பிரதான வீதியில் மட்டக்களப்பு சுமைதாங்கியடி, வலையிறவு பாலம் என்பனவற்றின் ஊடாக வெள்ள நீர் மூன்று அடிக்கு மேல் பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

இதன்காரணமாக மட்டக்களப்பிலிருந்து வவுணதீவில் உள்ள அரச திணைக்களங்களுக்கு கடமைக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஊடாக உழவு இயந்திரம் ஊடாக மக்களை கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதன் காரணமாக சில இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் வசித்துவரும் நிலைமையினையும் காணமுடிகின்றது.





