பல நோய்களுக்கு முக்கியமான ஆபத்து காரணியாக இருக்கும் புகையிலை! உணர வேண்டியது நாமே
முன்னைய காலங்களில் பெரியவர்கள் கூறும் பழமொழிகளில் தற்காலம் வரை புலக்கத்தில் இருக்கும் மொழிகளுள் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதும் பிரபல்யம் வய்ந்ததாகும்.
ஆனால் இந்த பழமொழிகளை பொய்யாக்கியது புகையிலை எனும் உயிர் கொல்லி. இப்போதெல்லாம் புகையிலையை யாரோ உபயோகிக்க அதன் விளைவை வேறு யாரோ பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.
போதைப்பொருள் பாவனைக்கு எரிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கம் இன்று அதன் வருவாயிலேயே பெருமளவு தங்கியுள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
உடலில் ஏற்படும் பாதிப்புகள்
மக்கள் கொள்வனவு செய்வதனால் விற்பனை செய்யப்படுகிறதா? விற்பனை செய்வதனால் மக்களால் கொள்வனவு செய்யப்படுகிறதா? என்பது தொண்டுதொட்டு கேள்விகுறியாகவே இருக்கின்றது. போதைப்பொருள் என்றாலே உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்தே.
இவற்றுள் அரசாங்கம் அனுமதி வழங்கிய போதைப்பொருள், அனுமதி வழங்காத போதைப்பொருள் என பாகுப்படுத்தப்படுவது மிகவும் வேடிக்கையானது.
புகையிலையை இன்று உபயோகிக்க தொடங்கினால் அதன் விளைவு கொஞ்ச நாள் கழித்தே உடலில் பாதிப்புகளை காட்டும். அதிலும் குறிப்பாக புகையிலை எனும் வினையை யாரோ விதைக்க அவரை சுற்றி இருக்கும் அப்பாவிகள் அதன் விளைவை அறுக்க நேரிடுவதே வருந்தத்தக்க உண்மை.
மேலும் புகையிலைகளில் பலவிதம் இருக்கின்றமை நம்மில் பலரும் அறிந்ததே. அப்படி இதுவரை அறியப்பட்ட 65 வகையான புகையிலை செடிகளில் இருந்து புகையிலை பயிரிடப்படுகின்றது. இவற்றுள் நிக்கோட்டினா டொபாக்கும் (Nivotiana tobaccum) என்ற வகை வணிக அளவிலும் பரவலாக புகையிலைக்காக வளர்க்கப்படுகிறது.
புகையிலை உடல் நலத்தை கடுமையாக பதிப்பதால் வளர்ந்துவரும் புகையிலையின் பயன்பாடு உலகம் முழுவதற்கும் கவலையளிக்கும் விடயமாக கருதப்படுகிறது.
குருதியோட்ட குறைபாடு, இதய நோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு, கடுமையான சுவாச நோய்கள் ஆகிய தொற்றா நோய்கள் இன்று உலகம் முழுவதும் அதிக மரணத்துக்கு காரணமாக அமைகின்றது. இவை புகையிலை பயன்பாட்டுடன் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளன.
உலக சுகாதார தாபனம் எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் தொற்றா நோய்களால் 3.80 கோடி மக்கள் உலகம் முழுவதும் மரணிகின்றனர். இவற்றுள் 85 வீதம் மரணங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளிலேயே ஏற்படுகின்றன.
மேலும் அனைத்து வயதினரையும் பாதிக்கும் பல நோய்களுக்கு புகையிலையே மிக முக்கியமான ஆபத்து காரணியாக காணப்படுகிறது. ஒரு ஆண்டில் 60 லட்சம் பேரை புகையிலை பயன்பாடு கொல்வதாக உலக சுகாதார தாபனத்தின் புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது.
இவற்றில் 50 இலட்சம் பேர் நேரடியான புகையிலை பயன்பாட்டினாலும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பிறர் புகைப்பதனால் ஏற்படும் பாதிப்பினாலும் மரணிகின்றனர்.
ஒவ்வொரு 6 வினாடிக்கும் ஒருவர் புகையிலை பயன்பட்டினால் இறப்பதாக அறியப்பட்டுள்ளது. தற்போது புகையிலை பயன்படுத்துபவர்களில் பாதி பேர் புகையிலை சம்மந்தமான நோய்களினாலேயே முடிவில் இறப்பது நிச்சயம் எனவும் உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது.
மேலும் புகையிலையில் 5000 இற்கும் மேல் நச்சு பொருட்கள் அடங்கியிருப்பினும் மிகவும் ஆபத்தான நச்சு பொருட்களாக நிக்கோட்டின், கார்பன் மோனொக்சைட்டு, தார் ஆகியவை குறிப்பிடப்படுகின்றது.
வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கம்
புகையிலையின் விளைவுகளுக்கு மிக முக்கிய காரணம் அதில் அடங்கியுள்ள நிக்கோட்டினே ஆகும்.நச்சு பொருளான இந்த இரசாயணம் அதை உபயோகிப்பவர்களை அந்த பழக்கத்துக்கு அடிமையாக்கி விடுகிறது. உறிஞ்சப்பட்ட நிக்கோட்டின் ஒரு சில வினாடிகளிலேயே மூளையை எட்டுகிறது.
எனவே புகையிலையோடு இயைந்த உளவியல் பலன்கள் உடனடியாக ஏற்படுவதோடு மூளையின் ஏற்பிகளில் கட்டுன்டு மூளை வளர்ச்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பின்னர் அந்த நிக்கோட்டின் உடல் எங்கும் பெரும்பாண்மை எலும்புகளுக்கும், தசைகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றது.
பிற போதை மருந்துக்களை போன்றே தன் செயலுக்கான ஏற்பு தன்மையை தானே உருவாக்கிக் கொள்கின்றது. குறுதியால் கொண்டு செல்லப்படுகின்ற ஒட்ச்சிசனை புகையிலையில் காணப்படும் கார்பன் மொனோக்சைட்டு குறைத்து மூச்சு திணறலை ஏற்படுத்துகின்றது.
ஒட்டும் சக்கையான தாரில் பென்சோபைரின் காணப்படுகின்றது இது புற்று நோயை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான பொருளாகும். மேலும் இதில் காணப்படும் கார்பன்டைஒசைட்டு, நைதரசன் ஒசைட்டுக்கள், அமோனியா ஆவியாகும் நைட்ரோசமைன்கள் ஐதரசன் சயநைட் ஆவியாகும் கந்தகம் போன்ற பொருட்கள் உடலில் வெவ்வேறு பாகங்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை.
புகையிலையை உள்ளீர்க்கும் வழிகளில் மிக முக்கிய இடத்தை சிகரெட் பிடித்துள்ளது. மேலும் சுருட்டு, புகைக்குழல், ஷிஷா, புகையிலை மெல்லுதல், காரம்பு சிகரெட், மூக்கு பொடி, மின் சிகரெட் என பல வழிகளில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
நிக்கோட்டின் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு
புகை பிடிக்காகவர்கள் புகை பிடிப்பவர் வெளிவிடும் நிக்கோட்டினும் நச்சு வேதிப் பொருட்களும் கலந்த புகையை சுவாசித்தால் அதனை புகைக்காமல் சுவாசித்தல் அல்லது இரண்டாம் கட்ட புகையை சுவாசித்தல் எனப்படுகிறது.
புகைபிடிக்கும் ஒருவர் ஒரு முறை புகை புடிக்கும் போது தனது வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கின்றார். வாழ் நாள் முழுவதும் புகை பிடித்துக்கொண்டே இருப்பவர் தனது ஆயுற்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழக்கின்றார் என உலக சுகாதார தாபனம் குறிப்பிடுகின்றது.
புகைக்க ஆரம்பித்த சில வினாடிகளிலேயே அதிலுள்ள நிக்கோட்டின் மூளைக்கு செல்லும். அதனால் சாந்தமாகவும் புத்தி கூர்மையுடனும் இருப்பது போல் தோன்றுகிறது. நாளாக நாளாக இயல்பாக இருப்பதற்கே புகைக்க வேண்டிய அபாயம் உருவாகும்.
தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் பயன்படுத்தும் ஒருவர் நாளிடைவில் பத்து சிகரெட் புகைக்க தொடங்கி விடுகிறார். சிகரெட், பான்பராக், குட்கா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருட்களுக்கும் வாய் தான் பிரதானமாக செயற்படுகிறது.
புற்று நோய் தாக்கம்
இதனாலேயே புகையிலை பயன்படுத்துவோரில் 90 சதவீதம் பேருக்கு வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. புகையிலையை மெல்லும் போது சிகரெட் புகைப்பதை விட மூன்று மடங்கு அதிகமாக நிக்கோட்டின் நம் உடலில் கலக்கிறது.
இதனால் கன்னம்,நாக்கு, உணவு குழாய், சுவாச குழாய் ஆகியவற்றில் வெள்ளை திட்டுக்கள் உருவாகி நாளிடைவில் புற்று நோயாக உருவெடுக்கும்.
அது மட்டுமன்றி சொரியாசிஸ், கண்புரை, தோல் சுருக்கம், காது கேளாமை, பற் சிதைவு, சுவாச குழாய் அடைப்பு எலும்பு புரை நோய், இதய நோய், வயிற்று புண், கர்ப்பபை வாய் புற்றுநோய் , கரு சிதைவு மற்றும் ஆண்மை குறைவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றது. புகைப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடுவேன் என்பதுதான்.
ஒரு வினாடியில் ஆரம்பித்த அந்த புகை பழக்கத்தை ஒரு வினாடியில் விட்டுவிட மன வலிமை இருந்தால் போதும் அது தான் புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட முதல்வழி புகையிலை பழக்கத்தால் சீரழிந்துக் கொண்டிருக்கும் நம்முடைய விலை மதிப்பற்ற உடலை யோகா, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றின் மூலம் மீட்டெடுக்க முடியும்.
அதுமட்டும்மன்றி பொருளாதார ரீதியிலும் புகைப்பழக்கத்தை விடுவது பாரிய. மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை புகைப்பவர்கள் சற்று நினைவில் கொள்ள வேண்டும். புகையிலை பழக்கத்தை நிறுத்திய இருப்பதாவது நிமிடத்தில் இருந்து நம் உடல் சுத்தமாக ஆரம்பிக்கும் இரத்த ஓட்டமும் இதயமும் சீராக இயங்க ஆரம்பிக்கும் 9 மாதங்களில் இருமல், மூச்சு திணறல் போன்ற நோய்கள் குணமாகும்.
புகையிலை பழக்கத்தை ஒழிக்கும் சிகிச்சை முறைகள்
ஐந்து வருடத்தில் பக்கவாதம் உருவாவதற்கான வாய்ப்புகள் நீங்குவதோடு 15 வருடங்களில் பழைய ஆரோக்கியத்தை மீண்டும் பெற முடியும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே புகையிலை பழக்கத்தை இந்த நொடியே நிறுத்தி விடுவதே சிறந்தது.
இதனை நிறுத்திய சில நாட்களில் கோபம், எரிச்சில் போன்றவை அதிகமாக ஏற்படும் இதனை தவிர்க்க அதிகமாக தண்ணீர் அருந்தவது, உடற்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது போன்றன உதவும் மேலும் காரம்பு, ஏலக்காய் போன்றன புகையிலை பயன்படுத்தும் எண்ணத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை எனவே இவற்றை மெல்லலாம்.
மேலும் புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அதற்குரிய மருத்துவர்களை கலந்தாலோசித்து தேவைக்கேட்ப மருந்துக்களை எடுத்துக்கொண்டால் புகையிலை எனும் உயிர் கொல்லியிடமிருந்து இலகுவில் விடுபடலாம்.
புகையிலை பொருட்களின் தயாரிப்புக்களை அரசாங்கம் நினைத்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் . ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் நாசுக்கான வேலையை தான் பார்க்கும் என்பதை மக்கள் உணராத வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்போவதில்லை.
நாடு முழுவதும் மதுபான சாலைகள் இயங்குவதற்கு அனுமதி பத்திரம் வழங்குவதும் அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுவடுவதும் அரசாங்கம். தீமை என ஊர்ஜிதமான ஒரு விடயத்தை சட்ட ரீதியாக செய்தால் மட்டும் தீமை விளையாதா?
புகையிலை பொருட்களை அரசாங்க அனுமதியுடன் பயன்படுத்தினாலும் சட்ட விரோதமாக பயன்படுத்தினாலும் புகையிலை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது மெய்.
புகையிலை பழக்கத்தை விடுவதனால் நீங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை ஆனால் பெறுவதற்கு எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது என்பது உறுதி. இதனை மக்கள் தான் உணர்ந்து செயற்பட வேண்டும்.