பிள்ளையானின் வருகையின் பின்னர் மீண்டும் பறிபோகும் மேச்சல் தரை காணிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை காணிகள் பிள்ளையானின் வருகையின் பின்னர் மீண்டும் அபகரிக்கப்படுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் பாரிய காணி அபகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் குறித்த காணி அபகரிப்புக்கு எதிராக பண்ணையாளர்கள் மேற்கொண்ட போராட்டம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனால் தொடரப்பட்ட வழக்கு, மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் தமிழ் மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்ததனால் இந்த காணி அபகரிப்புக்கு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்கள் பண்ணையாளர்களுடன் கலந்துரையாடுவதற்காக மயிலத்தமடு மாதவனை பகுதிக்கு சென்று பண்ணையாளர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன், இந்த மேய்ச்சல் தரை காணிகள் தொடர்பாக பல வாக்குறுதிகளையும் அளித்திருந்தார்.
ஆனால் அவர் அந்த இடத்திற்கு விஜயம் செய்த அடுத்த நாளே வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் பலர் மீண்டும் கால்நடைகளின் மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து காடுகளை அழித்து காணிகளை துப்பரவு செய்து கூடாரங்களை அமைத்து வருவதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையானின் வருகையின் பின் பெரும்பான்மை இனத்தவரின் காணி அபகரிப்பு அதி தீவிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்குள்ள பண்ணையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியும், சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தங்களை பிள்ளையான் வந்து சந்தித்தது தங்களுடைய மேச்சல் தரைகாணியை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் பிள்ளையானின் மாதவனை வருகையின் பின் அதிகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் காணி அபகரிப்புக்கு பிள்ளையான் என்ன பதில் கூறப்போகின்றாரென? கால்நடை பண்ணையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிழக்கை மீட்க போறோம் என்று கூறியவர்கள் இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழர்களின் காணிகளையும் மாற்று இனத்தவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே உள்ளதாக அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam