தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒருமைப்பாட்டு முயற்சி குழப்பமடைவதற்கான பின்னணி
இலங்கைத் தமிழ்பேசும் அரசியல்வாதிகளின் கூட்டு முயற்சிக்கான நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தரப்பு மேற்கொண்டு வரும் அரசியல் சமகாலத்தில் முதன்மையானதாக உரையாடப்படுகின்றது.
அத்தகைய முயற்சி முழுமைபெறாத போதும் அதனை நோக்கிய பிரயத்தனங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றதை அவதானிக்க முடிகிறது.
13 ஆம் திருச்சட்ட மூலத்தை அமுல்படுத்துவது என ஒரு தரப்பும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதென்ற இன்னோர் தரப்பின் அணுகுமுறையுமென இந்திய பிரதமருக்கு அனுப்பப்படும் கடிதம் தொடர்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இத்தகைய கூட்டுத் தீர்மானம் ஒன்றுக்கான அவசியப்பாடு பிராந்திய சர்வதேச நியமங்களுக்குள்ளால் நகர்தப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இக்கட்டுரையும் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படவிருந்த கடிதம் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்திற்கான காரணங்களை விளங்கிக் கொள்ளும் நோக்குடன் வாசகர்களிடம் ஒப்படைக்க முயலுகிறன்து.
தமிழீழ விடுதலைக் கழகத்தின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் 13 வது திருத்தம் தொடர்பில் அனைத்து தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து தீர்மானம் ஒன்றினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தார்.
அதன்பிரகாரம் 13 திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தல் என்ற கருதுகோளுடன் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை நெருக்கடிக்குள்ளாகி குழப்பத்தில் உள்ளது.
இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதோ தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றிணைப்பதோ சாத்தியமற்ற நகர்வு என்ற கருத்து வலுவானதாக கடந்த எழுபது வருடங்களாக நிறுவப்பட்டு வருகிறது.
சில காலப்பகுதியில் சில அரசியல் தலைவர்கள் அதனைக் கடந்து ஐக்கிய முன்னணிகளையும், கூட்டுத் தீர்மானங்களையும் முன்னெடுத்துள்ளனர். அதில் தந்தை செல்வா முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பதே பிரதானமான செய்தியாக உள்ளது.
உலகில் அதிக மாற்றங்களை செய்த யூதர்கள் பற்றி ஒரு மரபு சொற்றொடர் உண்டு அதாவது 'இரண்டு யூதர்கள் ஒன்று சேர்ந்தால் மூன்று கட்சிகளை உருவாக்குவார்கள்" என்பது போலவே ஈழத்தமிழரது அரசியல் மாறியுள்ளது.
தமிழீழ விடுதலைக் கழகத்தின் முயற்சியை குழப்பத்துக்குள்ளாக்கியவர்கள் யார் என்பதே பிரதான கேள்வியாகும். ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமான தமிழீழ விடுதலைக் கழகம். இரண்டாவது பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக உள்ளது.
அது மட்டுமன்றி வடக்கு, கிழக்கில் அதிக வாக்குகளை ஈர்க்கும் கட்சிகளில் ஒன்றென்பதையும் கொண்ட அமைப்பாகும். அதிலும் வன்னி தேர்தல் மாவட்டம் அவர்களது பலமாகும்.
ஆனால் அவர்கள் 13ஐ முழுமையாக அமுலாக்குவதென்பதில் கவனம் கொள்ள முயன்ற போது வடக்கு, கிழக்கு தமிழ் தேசியக் கட்சிகளை கடந்து ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உண்மையில் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் தடத்தை அமைத்துக் கொண்டு இரண்டாவது தடத்தில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் சக்திகளை ஒன்றிணைக்க முயன்றிருக்கலாம்.
மூன்றாவது தடத்தில் மலையக சக்திகளை இணைப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் வாய்ப்பினை சுமூகமாக்கியிருக்க அதிக சந்தர்ப்பம் இருந்தது.
அதாவது முதலில் தமிழ் தேசியத்திற்குள் வெற்றி கண்டிருந்தால் ஏனைய சக்திகள் இலகுவில் கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பார்கள். அவ்வாறு அவர்கள் வராத பட்சத்தில் தமிழ் தேசிய சக்திகள் ஒன்றிணைந்து நகர்வை எட்டியிருக்க முடிந்திருக்கும்.
குழப்பத்திற்கான அடிப்படைக் காரணம் அது கட்டமைக்க ஆரம்பித்த போதே தொடங்கிவிட்டது. இரண்டு வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள தரப்புகளை அணுகும் போது இன்னோர் தரப்பாக அணுகியிருக்க வேண்டும்.
அதாவது ஏற்கனவே தமிழ் தேசிய சக்திகள் வரைந்து ஒப்புக் கொண்டவற்றை வடக்கு, கிழக்குக்கு வெளியேயுள்ள தரப்பிற்கு ஒப்படைத்து அத்தரப்பின் ஒப்புதலை எட்டியிருக்க வேண்டும்.
முதல் சந்திப்பிலேயே அத்தகைய ஒப்புதலுக்கான நகர்வை மேற்கொண்டிருக்க வேண்டும். காரணம் ஈழத்தமிழர்களே கடந்த எழுபதாண்டுகளாக இனப்பிரச்சினையின் பெயரால் அதிக இழப்புக்களையும், துயரங்களை சுமந்து கொண்டிருப்பதுடன் போர் முடிந்த பின்பும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
பல இலட்சம் மக்களின் இரத்தமும், சதையுமான இழப்புகளுக்கு பின்னால் துயரத்துடன் இருக்கும் இனத்தின் அரசியலும், அரசியல் தீர்வும் முதன்மையானது. அதன் அடிப்படையிலிருந்தே அனைத்து அணுகுமுறையும் கட்டமைக்கப்பட வேண்டும்.
கிடைத்துள்ள வாய்ப்புக்களை ஒன்றிணைவது என்ற போர்வையின் கீழ் அனைத்து தரப்பும் அழிக்க முயலுகிறதாக தெரிகின்றது. ஈழத்தமிழரது பிரச்சினை தனித்துவமானது. ஈழத்தமிழரது இந்தியாவுடனான உறவும் தனித்துவமானது. அதனை பொதுமைப்படுத்த முடியாது.
எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்த போதும் சரி தற்போதும் சரி இந்தியாவை அணுகுவதென்பது ஈழத்தமிழருக்கு அவசியமாதும், தனித்துவமானதும். ஆனால் 2009 பின்பு ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளாக தமிழ் தரப்பு இந்தியாவை தமிழ் மக்களின் நலன்சார்ந்து அணுகவில்லை.
மூன்றாவது முஸ்லீம் தரப்பினைப் பொறுத்தவரை தனது மக்களின் 1987 பின்பான காலப்பகுதியை மையப்படுத்தியே உடன்பாட்டுக்கு வர முடியாததெனக் கருதுகின்றது.
அதனாலேயே 13ம் திருத்தத்திற்கு உடன்படும் நிலையிலுள்ள முஸ்லீம் அரசியல் தரப்பு இலங்கை - இந்திய உடன்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
இலங்கை - இந்திய உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்த முனைவது அதிக நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல கிழக்கிலுள்ள பெரும்பான்மைத் தரப்புக்கும் நெருக்கடியானதாக அமைய வாய்ப்புள்ளது. அதனாலேயே இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்றவுடன், சில அரசியல் தலைமைகள் குழப்பமடைகின்றனர்.
நான்காவது மலையகத் தரப்புகளை இணைப்பதில் காட்டப்படும் அக்கறை வடக்கு, கிழக்கு அரசியல் தலைமைகளிடன் அதீதமாக காணப்படுகின்றது. அதிலும் அரசாங்கத் தரப்புக்களை இணைப்பதில் பூட்டன் உறவுகள் எல்லாம் கருசனை கொள்ளப்படுகின்றது.
அது மட்டுமல்ல அத்தகைய முயற்சியை மேற்கொள்ள விளைந்த தரப்பு அமைதியாக இருக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அதிக கவனம் எடுத்து ஈடுபட்டுள்ளமை கவனத்திற்குரியதாகும்.
இதனை எல்லாம் விளங்கிக் கொள்வதற்கு பெரிதான 'அறிவு தேவையில்லை" என்பதை வாசகர்களுக்கு நன்கு தெரியும்.
ஆனால் ஆளும் தரப்பினை உள்ளடக்க வேண்டும் எனக் கருதும் நிலை தமிழ் கட்சிகளுக்குள் உடன்பாடு காணப்பட்டால் அதனை எல்லோரும் இணைந்து மேற்கொள்வது அல்லது தமிழீழ விடுதலைக் கழகம் மேற்கொள்வதே அதிகம் பொருத்தமானதாக அமையும். அல்லாத சந்தர்ப்பங்கள் அனைத்தும் வீணான குழப்பத்தை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி அக முரண்பாடுகளையும் ஏற்படுத்த விளையும் என்பது கவனத்திற்குரியதாகுதம்.
ஐந்து கட்சிகளுக்கிடையே நிலவும் குழப்பம் அரசியல் சார்பு போட்டியாக அமைந்துள்ளதே அன்றி தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வுக்குரிய அணுகுமுறையாக தெரியவில்லை.
13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதென்பது இந்தியாவை அணுகுவதற்கான உபாயமாக அமையவேண்டுமே அன்றி தனித்த 13 ஐ பொறுத்த விடயமாக மட்டும் அமைந்துவிடக்கூடாது.
இத்தகைய நகர்வு பிராந்திய பூகோள அரசியலை கையாளுவதற்கான உத்தியாகவும் அமைவது அவசியமானது. அத்தகை தொலைநோக்குடன் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் எதிர்காலத்திலாவது அத்தகைய உத்தியுடன் நகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் கட்சிகளுக்கு உண்டு.
எனவே மீண்டும் ஒரு தடவை தமிழ் அரசியல் தலைமைகளிடம் ஒருமைப்பாடு இல்லை என்பதை வெளிப்படுத்தியதாக தெரிகின்றது. ஆனால் அத்தகைய முயற்சி முடிவுறுத்தாத நிலையில் அதற்கான வாய்ப்பு அதிகம் இல்லாத சூழல் ஒன்றே காணப்படுகிறது.
ஆனால் அத்தகைய நகர்வுகள் அவசியமானது. தவிர்க்க முடியாது தமிழ் அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைவது அவசியமானது. அல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் எதிர்கால அரசியலில் கட்சிகளையும் தலைமைகளையும் இனங்காண வேண்டும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
