அடுத்த இலக்கு உமது குழந்தைகளே! மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடவடிக்கை (PHOTOS)
உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடவடிக்கையொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர கட்டுப்பாட்டு சபை மற்றும் மாவட்ட செயலக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இன்று மட்டக்களப்பு நகர் பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
அடுத்த இலக்கு உமது குழந்தைகளே
இதன்போது "சிகரட் குடி செத்துடும் கிளி", "நாளாந்தம் மரணிக்கும் சுமார் 60 பேருக்குப் பதிலாக 80 பேரையாவது புதிதாகப் பழக்குவதே சிகரட் கம்பனியின் முயற்சியாகும்", "அவதானமாக இருங்கள் அவர்களின் அடுத்த இலக்கு உமது குழந்தைகளே" மற்றும் "இக்கால பெண்கள் விரும்புவது சிகரட் புகைத்து, முகம் அவலட்சணமான, வாயில் துர்நாற்றம் வீசுபவர்களை அல்ல, எங்களைப் போல் சுமார்ட் ஆண்களையே" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை இதன்போது பொதுமக்களுக்கு தென்படும் வண்ணமாக வாகனங்களிலும், பொது இடங்கள் மற்றும் கடைகளிலும் காட்சிப்படுத்தியதுடன், "வாழ்க்கை இன்பமானது - மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ளுங்கள்" எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரங்கள் இதன்போது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச புகைத்தல் தினம்
ஆண்டுதோறும் மே 31 திகதி சர்வதேச புகைத்தல் தினம் அனுஸ்டிக்ககப்பட்டு வருகின்ற நிலையில் உலகம் எங்கிலும் தங்களது ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமை கோருவதற்கும் எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்பதுமே இதன் பிரதான நோக்கமாக கருதப்பட்டே இத்தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தில் அங்கம் வசிக்கும் அனைத்து நாடுகளும் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தினத்தை அனுஸ்டித்து வருகின்றது. உலக சுகாதார ஸ்தாபனமானது 2022 ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்திற்கான உலகலாவிய கருப்பொருளாக "புகைப்பொருள் நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலானது" என பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



