தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா
மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டு தோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகின்றது.
2023ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா நேற்று (17.03.2024) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா கலந்து கொண்டுள்ளார்.
சான்றிதழ்கள்
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் தி. ஜோன் குயின்ரஸ், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ். ஏ. கலீஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் முதல் 200 மாணவர்களுக்கு பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குச் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.