இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கிய இரு அவுஸ்திரேலியர்கள் கைது
மில்லியன் கணக்கான டொலர் செலவில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் ஒன்றை பெற்றுக்கொள்ள இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியமை சம்பந்தமான இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல காலமாக நடத்திய விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள்
அவுஸ்திரேலியா பொலிஸார் பல தசாப்பதங்களாக சில நாடுகளில் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அண்மையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 67 மற்றும் 71 வயதான இந்த நபர்கள் தெற்காசிய நாடுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள நிறுவனம் என குற்றம் சுமத்தப்படும் நிறுவனத்தில் பணிப்புரிந்துள்ளனர்.
இந்த நபர்கள் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கவில்லை என்பதுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இந்த நபர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இலங்கையின் அரச அதிகாரிகளுக்கு மூன்று லட்சத்து 4 ஆயிரம் டொலர்களுக்கும் மேல் இலஞ்சமாக வழகியுள்ளனர் என அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் கூறியுள்ளனர்.
14 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் செலவில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் இரண்டு திட்டங்களுக்காக இவர்கள் இந்த இலஞ்சத்தை வழங்கியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் SMEC International Pty Ltd என்ற நிறுவனம் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சாட்சியங்கள் இருப்பதாக கூறியுள்ள உலக வங்கி
சம்பவம் தொடர்பாக மேலும் சில நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் Snowy Mountains Engineering Corporation என்ற அழைக்கப்படும் SMEC நிறுவனம் கடந்த 1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன் அவுஸ்திரேலியாவில் உட்கட்டமைப்பு வசதிகளை திட்டங்களை உருவாக்க ஸ்தாபிக்கப்பட்ட இந்த நிறுவனம், அன்று முதல் பல நாடுகளில் 5 ஆயிரத்து 400 ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு SMEC நிறுவனத்தின் நான்கு துணை நிறுவனங்களுக்கு இந்த நாடுகளில் ஒப்பந்தங்களை வழங்குவதற்கான கேள்வி மனுக்கள் தற்காலிகமாக உலக வங்கி தடை செய்துள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருத்தமற்ற செலுத்தல்கள் தொடர்பில் நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதற்கான சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள SMEC நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், இந்த குற்றச்சாட்டுக்கள் எதுவும் அவுஸ்திரேலிய திட்டங்களுடன் சம்பந்தப்பட்டவை அல்ல எனவும் தமது நிறுவனம் நிறுவனத்தின் ஒருமைப்பாட்டுக்கு இணங்கலான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.