ரஷ்யாவுக்கு தொடரும் சிக்கல்: அவுஸ்திரேலியா எடுத்துள்ள கடும் நடவடிக்கை!
உக்ரைனுக்கு எதிரான போருக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யாவின் 35 நிறுவனங்கள் மற்றும் 10 தனிநபர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பொருளாதார தடை விதித்துள்ளது.
அதன்படி ரஷ்யாவில் உள்ள 35 நிறுவனங்கள் மற்றும் முன்னாள் துணை பிரதமர்களான ஆண்ட்ரே பெலோசோவ், டிமிட்ரி செர்னிஷென்கோ, பெலாரசில் உள்ள இராணுவ உயர் அதிகாரிகள் என 10 தனிநபர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது ரஷ்ய - அவுஸ்திரேலிய வர்த்தக பொருளாதார நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கும் என நம்பப்படுகிறது.
ஆயுதம் மற்றும் பொருளாதார உதவி
உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக உக்ரைன் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகிறது.
இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.
உலக நாடுகளின் கண்டனம்
17 மாதங்களை தாண்டி போர் தொடர்ந்து நடைபெறுவதால் இது உலக பொருளாதாரம் பெரும் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.
அதாவது கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் முக்கிய ஏற்றுமதி மையங்களாக இந்த இரு நாடுகள் காணப்படுவதால் அவற்றின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
போருக்கு முந்தைய காலங்களில் கருங்கடல் ஒப்பந்தம் மூலம் தானியங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி இந்த ஒப்பந்தம் காலாவதியானதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இதற்கு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |