அவுஸ்திரேலியாவில் ஒன்பது ஆண்டு கால சிறை வாசத்திலிருந்து மீண்ட இரு அகதிகள்!
அவுஸ்திரேலியாவின் 9 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்ட ஈரானிய அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த மெஹ்டி அலியும், அவரது உடன்பிறவா சகோதரன் அட்னானும் தமது 15வது வயதில் இந்தோனேசியா வழியாக வந்து அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சமடைந்தவர்கள்.
கிறிஸ்மஸ்தீவிலிருந்து பல தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்ட இவர்கள், பின்னர் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்ட பின் மருத்துவ தேவை கருதி அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுதி தடுப்பில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், பிரிஸ்பேனிலும் பின்னர் மெல்பன் பார்க் விடுதி என மாறிமாறி சுமார் 2 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டபோதிலும், படகில் வந்த காரணத்தால் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படாமல் விடுதியில் தமது வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா-அமெரிக்கா இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவில் மீள் குடியமர்த்தப்படுகின்றனர். இதற்காக இந்த இரு அகதிகளும் அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி விவகாரத்தில் நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த டென்னிஸ் நட்சத்திரம்
நோவாக் ஜோகோவிச் அலியும், அட்னானும் தடுத்துவைக்கப்பட்ட பார்க் விடுதியில் வைக்கப்பட்டிருந்தார்
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.