சட்டமா அதிபருக்கு முதுகெலும்பு இல்லை: பிரிட்டோ பெர்னாண்டோ ஆதங்கம்
அரசியலுக்காகவும், ஜனாதிபதிக்காகவும் எங்களுக்காக முன்னிற்க வேண்டியவர் எம்மை காட்டிக்கொடுக்கின்றார். இதை எங்கு போய் கூறுவது? வீதியில் வந்துதான் கூற வேண்டியுள்ளது என காணாமல்போனோர் குடும்பங்களின் ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கரன்னகொடவுக்கு எதிரான குற்ற பகிர்வு பத்திரத்தை மீளப் பெறுவதாகச் சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.
எனினும், குற்றப்பத்திரிகையை மீளப் பெறச் சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தி, இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் விசாரணை இன்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
இதன்போது நீதிமன்ற வளாகத்தில் கூடிய பாதிக்கப்பட்ட மக்கள் சட்டமா அதிபரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி, அமைதி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
காணாமல்போனோர் குடும்பங்களின் ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால் எமது வாதங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் அவர்களது இரகசிய ஆவணத்தை எங்களுக்கு வெளிப்படுத்தாத நிலையில் நாம் எப்படி விடயங்களை முன்வைக்க முடியும்.
நீதிமன்ற நடைமுறைகள் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் இது நியாயமில்லை என்பதே எம்முடைய வாதம்.
ஏதோ ஒரு காரணத்திற்காக கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கினை தொடர்ந்து நடத்த வேண்டுமென நீதிமன்றம் தெரிவிக்கும் பட்சத்தில், சட்டமா அதிபரால் என்ன செய்ய முடியும்? அவர் குற்றவாளியல்ல எனத் தெரிவிக்கும் ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் என்ன செய்ய முடியும்.
சட்டமா அதிபருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடியாதல்லவா? எமக்கு சார்பாக அவரே செயற்பட வேண்டும். சட்டமா அதிபர் எம்மை காட்டிக்கொடுத்துள்ளார். கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு விசாரணையைக் காட்டிக்கொடுத்துள்ளார். இதற்கு ஒரு காரணம் உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புலனாய்வாளர்கள், இராணுவத்தைத் தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனைத் தடுப்பதாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதனையே சட்டமா அதிபர் செய்கின்றார். சட்டமா அதிபருக்கு முதுகெலும்பு இல்லை.
அரசியலுக்காகவும்,
ஜனாதிபதிக்காகவும் எங்களுக்காக முன்னிற்க வேண்டியவர் எம்மை
காட்டிக்கொடுக்கின்றார். இதை எங்கு போய் கூறுவது? வீதியில் வந்துதான் கூற
வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
