அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம்
பதுளை
பசறை தேசிய பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று தேசிய பாடசாலைக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று காலை 8.30 மணி முதல் 9 மணி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,
பெருந்தோட்ட பகுதியை சார்ந்த பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் பாரிய அர்ப்பணிப்புடன் இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் நலனிற்காக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த தருணத்தில் அரசாங்கம் மாணவர்களின் நலனை கருதி அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்ப்புடன் இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டுடன் சேவை புரிந்து வருகின்றனர்.
இத்தருணத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு இணைய வசதிகள் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
திருகோணமலை - கந்தளாய்
கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் ஆசிரியர்களின் சம்பளத்தினை அதிகரிக்கக் கோரி பெற்றோர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (3) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையின் முன்னால் இவ்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வருகின்ற வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தினை அதிகரிக்குமாறும், ஆசிரியர்களுக்கு கௌரவத்தினை பெற்றுக்கொடுக்குமாறும் பெற்றோர்களினால் கோசங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
இவ்கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
திருகோணமலை - மிஹிந்து புரம்
அதிபர் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில் மஹிந்து புரம் பிரதேசத்தில் 100க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பிரதான வீதிக்கு இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மிஹிந்த புர வித்தியாலய பெற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது,
மிஹிந்த புர மகாவித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக தாம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு ஆசிரியரினால் மாத்திரமே ஒரு வைத்தியர், பொறியியலாளர் மற்றும் சட்டத்தரணியினை உருவாக்க முடியும்.
அவ்வாறான ஒரு ஆசிரிய குலாமின் பிரச்சனைகளை இந்த அரசாங்கம் தீர்த்து வைக்காமல் இருப்பது பெரிதும் கவலைக்குரிய விடயமாகவும், பாரதூரமான விடயமாகும் உள்ளது.
எனவே அதிபர் ஆசிரியர்கள் சார்பாக இன்றைய தினம் பெற்றோர்களாகிய நாங்கள் வீதியில் இறங்கி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக இதன்போது தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்
அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று யாழ்ப்பாணம், உரும்பிராயில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஆகிவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம், உரும்பிராயில் அமைந்துள்ள கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் உணர்ந்துகொண்டு அதிபர் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
வவுனியா
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு முன்னால் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா தெற்கு வலய பாடசாலைகளின் முன்னால் இன்று (03.11) மதியம் இடம்பெற்றது.
அந்தவகையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி என்பவற்றில் போராட்டம் இடம்பெற்றது.
நுவரெலியா
ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைக் கோரி நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (03) கவனயீர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலைகளின் பெற்றோர்கள் சங்கத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியாவில் உள்ள நல்லாயன் மகளிர் கல்லுரி மற்றும் புனித சவரியார் பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களின் பெற்றோர்களே இவ்வாறு பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தை நடத்தினர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி பாடசாலை அதிபர், ஆசிரியர் போராட்டங்களிற்கு பெற்றோர் சமூக அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டங்கள் மாவட்டத்தின் பல பாடசாலைகள் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த போராட்டங்கள் இடம்பெற்றன.
கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாக பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு அதிபர் ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மட்டக்களப்பு
பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று (03) பிற்பகல் கொட்டும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ( பட்டிருப்பு ) தேசிய பாடசாலைக்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு அதிபர், ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டபனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பொன்னத்துரை உதயரூபன் (Ponnuthurai Udayarupan), உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு முன்பாக சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் பேரணியாகச் சென்று பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் வரைச் சென்று அங்கும் கோசங்களை எழுப்பினர்.