மட்டக்களப்பில் மயக்க மருந்து தெளித்து கொள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு (Video)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரின் வீட்டில் மயக்கமருந்து தெளித்து கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரனின் வீட்டிலேயே இந்த கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் மனைவி தனியாக இருந்தபோது அங்குவந்த பெண் கணவரின் பெயரை கூறி அழைத்தபோது அவர் வெளியில் சென்றுள்ளதாக மனைவி கூறியுள்ளார்.
இதன்போது தான் கணவரிடம் சமாதான நீதிவான் கையொப்பம் பெறவந்ததாகவும், அதனை பெற்று வைக்குமாறும் கூறியபோது வீட்டிலிருந்த மனைவி வெளியில் வந்தபோது அங்கு நின்ற மனைவியின் முகத்தின் மீது மயக்க மருந்தை விசிறியுள்ளார்.
எனினும் சுதாகரிததுக்கொண்ட அவர் குறித்த பெண்ணை பிடிக்க முனைந்தபோது அங்கு வந்த ஆண் ஒருவர் அவரை இழுத்துக்கொண்டு ஓடிச்சென்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறி சென்றுவிட்டதாக வாலிப முன்னணியின் தலைவரின் மனைவி தெரிவித்தார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேநேரம் சம்பவம் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரின் வீட்டுக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





