வவுனியாவில் யுவதி மீது தாக்குதல் : இரு பெண்கள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரு பெண்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (20.01.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்க்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப்பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையிலேயே குறித்த யுவதி மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்பாடு
குறித்த பகுதியில் வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்களினாலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதும் பிரதேச சபையால் பிரச்சினை தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்க்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்ற நிலையில், கழிவு நீரை வீதிக்கு மாற்றிய வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு பகுதியினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் காயமடைந்த யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |