ஆடைகளை களைந்து இளைஞர் மீது தாக்குதல்:11 மாதங்களின் பின்னர் சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை, அவருடைய தாயின் கண்முன் நிர்வாணமாக்கி சித்திவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும், பொலிஸ் உயர்மட்டத்தில் இருந்த செல்வாக்குக் காரணமாக அந்த நபர் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே, திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை சந்தேகநபர் பார்வையிட வந்த வேளை பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவருக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள்
கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்று அவரை கைது செய்வதற்காக சிவில் உடையில், தனியார் ஒருவரின் ஓட்டோவில் பொலிஸார் சென்றிருந்தனர்.
இதன்போது, பொலிஸாரின் பிடியில் இருந்து சந்தேகநபர் தப்பிச்சென்றிருந்தார். இதையடுத்து, "சந்தேகநபரை கைது செய்வதற்கு எதற்கு சிவில் உடையில் தனியாரின் ஓட்டோவில் சென்றீர்கள்?" என்று பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்றதே தவிர, சந்தேகநபர் தொடர்பான விடயங்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை.

இதற்கு, சந்தேகநபருக்கும் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இருந்த நெருக்கமான தொடர்புகளே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே, சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |