வவுனியாவில் வர்த்தக சங்கத் தலைவர் மீது தாக்குதல்
வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் மீது நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் நபரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முரண்பாடு
வவுனியா நகரில் டெங்கு நோய் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரப் பிரிவு, வவுனியா மாநகரசபை மற்றும் வர்த்தகர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பார்வையிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான முரண்பாடு ஒன்றைத் தொடர்ந்து, வர்த்தகர் ஒருவரால் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக சங்க தலைவர் கிருஸ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த வர்த்தக சங்கத் தலைவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.