குச்சவெளி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்! எழுந்துள்ள கண்டனங்கள்
திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு எதிராக பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
உடனடி சட்ட நடவடிக்கை
இது குறித்து நேற்று(04.06.2025) ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய கடற்டையினர் மீது உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயத்தை நேற்றைய(04.06.2025) நாடாளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டிய திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், கடற்டையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அறிக்கை
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இது தொடர்பாக ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அத்துடன், திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
மேற்படி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




