முள்ளியவளையில் முன்னாள் போராளிகள் மீது தாக்குதல்: பொறுப்பை மறந்த மக்கள்
முல்லைத்தீவு - முள்ளியவளையில் முன்னாள் போராளி ஒருவர் மீது அடையாயம் தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைக்காக போராடி இறுதி போரின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தாயகத்தில் இயல்பாக அமைதியாக தங்கள் வாழ்வினை தொடர விரும்பி வாழ்ந்துவருகின்றனர்.
அவர்கள் ஏனையவர்களைப் போல் மதிக்கப்படுவதிலும் பார்க்க உயர்வாக போற்றப்படுவது தான் ஈழத்தமிழருக்கு பெருமைக்குரிய செயற்பாடாக இருக்கும் என அறிஞர்கள் பலரால் கருத்துரைக்கப்படுகிறது.
முன்னாள் போராளிகள் பல வழிகளிலும் நெருக்கடிக்குள்ளாகியபடி வாழ்கின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு சான்று என சுட்டிக்காட்டப்படுவதும் நோக்கத்தக்கது.
நடந்தது என்ன
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு முன்னுள்ள வீடொன்றில் 07.01.2024 அன்று இரவு முன்னாள் பெண் போராளி ஒருவர் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் (மாஞ்சோலை) அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த அவர் மீண்டும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
“இரவு வீட்டினுள் நுழைந்தவர்கள் தலையில் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
யாரோ உள்நுழைந்து வருவதை அடையாளம் கண்டு கொண்டதால் தன் தம்பிக்கு அவர் அழைப்பெடுத்துள்ளார்.
அதனாலேயே உள் நுழைந்தவர்கள் வெளியேறி இருக்கின்றார்கள். அவ்வாறு வெளியேறும் போது அவரை தலையில் தாக்கிவிட்டு ஓடி உள்ளார்கள்.
இந்த நிகழ்வினைத் தொடர்ந்து அடுத்த நாட்களில் இது போலவே அயலில் உள்ள மேலும் மூன்று வீடுகளினுள் உள்நுழைந்து இருக்கிறார்கள்.
ஆனாலும் எந்தப் பொருட்களையும் திருடவில்லை. ஏனைய வீடுகளில் யாரையும் பலமாக தாக்கவில்லை. இருந்தாலும் தாக்க முயன்றிருக்கிறார்கள்.
தாக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி
எல்லா வீடுகளிலும் பெண்கள் மட்டும் தங்கிருந்துள்ள வேளையில் உள்நுழைந்து இருக்கின்றனர். முறைப்பாடு செய்த போதும் அடுத்த நாள் தான் பொலிஸார் விசாரணை செய்தார்கள்.
“நீங்கள் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும். தங்களுக்கு உடன் வரமுடியாது. அடிக்கடி போய்வர வாகன தேய்மானம் இருக்கிறது” என்று கூறிய பொலிஸார் கட்டிலில் படுத்திருந்தவர் எழுந்திருக்கும் போது மயக்கத்தால் விழுந்திருக்க வேண்டும்.
அதனால் தான் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது என பொலிஸார் மேலும் கூறியதாக தாக்கப்பட்ட முன்னாள் பெண் போராளியின் கணவர் குறிப்பிட்டார்.
வைத்தியசாலை போலியாக அறிக்கை தருவதால் அதனையும் தாங்கள் நம்ப மாட்டோம்” என கூறியதாக பாதிப்புக்குள்ளான பெண்ணின் கணவர் குறிப்பிட்டிருந்தார்.
சட்டவைத்தியரின் அறிக்கையினை கொண்டு விசாரணையை முன்னெடுக்க அழுத்தம் கொடுக்காதிருக்கவே பொலிஸார் இப்படி பேசியிருக்கலாம் எனவும் அந்த பெண்ணின் தாய், தம்பி உடன் உறவினர்கள் சிலரும் இருக்கும் போது நிகழ்ந்த உரையாடலின் போது பாதிப்புக்குள்ளான முன்னாள் போராளியின் கணவர் குறிப்பிட்டிருந்தார்.
கணவரும் ஒரு முன்னாள் போராளி என்பதும் தாக்குதல் நடந்த போது அவர் வீட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட இவர்கள் மேலும் மனவுழைச்சலுக்கு உள்ளாகும் வகையில் பொலிஸார் கருத்துரைத்துள்ளனர் என்பதை கணவனின் கருத்துப் பகிர்வில் இருந்து அறிய முடிகிறது.
தாக்குதலுக்குள்ளான முன்னாள் பெண் போராளி தனது ஒரு காலினை போரின் போது இழந்துள்ளார். அவரது கணவரும் தன் ஒரு கண்ணை போரில் இழந்துள்ள நிலையில் இருவரும் சமூகத்தில் நன் மரியாதையோடு வாழ்ந்து வரும் இவர்களுக்கு இந்த நிகழ்வு ஏன் நடந்தது என ஊகிக்க முடியவில்லை என அயலவர்கள் பேசிக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது கிறீஸ் மனிதன் போன்ற ஒரு முன்னெடுப்பாக இருக்கலாம். மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் அரசின் செயல் என சிலர் தங்களின் ஊகத்நினையும் பகிர்ந்திருந்தனர்.
இந்த தாக்குதலின் தாக்கம் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்றாக அதிகம் யோசித்ததினால் பாதிக்கப்பட்ட பெண் போராளியின் கணவரும் மூக்கால் இரத்தம் வடிந்து இப்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவர்களது உறவினர்களால் குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது.
போராளிகளின் இயல்பு வாழ்க்கை
இலங்கையின் ஏற்பட்ட இனமுரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடத்தே தோன்றிய விடுதலை உணர்வின் மூலமே உள்நாட்டில் ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றிருந்தது.
உரிமைகள் பறிக்கப்பட்டதாலேயே அதனை மீட்டெடுத்திட அவர்கள் போராட தலைப்பட்டனர். மீண்டும் அதே இக்கட்டை நினைவுபடுத்தி அவர்களை இயல்பான வாழ்வுலகத்திலிருந்து போராட்ட வாழ்வுலகத்திற்கு கொண்டுசெல்லும் போக்கு நன்றன்று.
வாழ வேண்டும் என்றால் போராட வேண்டும். இல்லையேல் சாக வேண்டும். சாகும் போது போரடிச் சாகலாம் என்ற மனநிலை தோற்றம் பெற்று விட்டால் மீண்டும் ஒரு இரத்தம் சிந்தும் அசௌகரியத்தை இலங்கையின் சமூகங்கள் எதிர்கொள்ள நேரிடும் என உளவியல் நோக்கில் சமூகவிடய ஆய்வுகளில் ஈடுபடும் உளவள ஆலோசகர் ஒருவரிடம் கேட்டபோது கருத்துரைத்திருந்தார்.
ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சாதாரண வாழ்வில் அவர்களை ஈடுபடச் செய்ய முயன்ற அரசின் புனர்வாழ்வுச் செயற்பாட்டு நோக்கம் முன்னாள் போராளிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மூலம் வீணடிக்கப்பட்டுப் போகிறது.
இதனை தடுத்திட பொலிஸார் குற்றத்தன்மையற்ற நிலையை சமூகத்தில் பேணுவதிலும் மக்களோடு பொருத்தமான முறையிலும் நடந்து கொள்வதோடு சொல்லாடல்களையும் பொறுப்புணர்ச்சியோடு மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
முன்னாள் போராளிகளை சாதாரணமாக இயல்பாக வாழும் வகையினை ஈழத்தில் வாழும் மக்கள் தங்களிடையே பொறுப்புக்களை சுமந்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மன ஆறுதலுக்காக அவர்களோடு அவர்களது தியாகங்களை பாராட்டிப் பேசிக்கொள்ள வேண்டும். வாழ்வியலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள உதவிட வேண்டும் என சமூகவிடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கை சுதந்திரப் போராளிகள்
விடுதலை வேண்டிய போராட்டங்களை இலங்கையர்களும் பிரிட்டிஷ் மற்றும் போர்த்துக்கேயர், ஒல்லாந்தருக்கு எதிராக மேற்கொண்டிருந்தனர்.
1947 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடையும் வரை இலங்கைக்காக விடுதலை வேண்டி போராடிய அத்தனை பேருமே காலனித்துவ நாடுகளுக்கு பயங்கரவாதிகளாகவே இருந்துள்ளனர்.
அந்நியரை எதிர்த்து போராடிய பண்டாரவன்னியன்,சங்கிலியன் போன்ற தமிழ் மன்னர்களும் உண்டு.
இவர்கள் அன்று அந்நியருக்கு முரண்டு பிடித்துக்கொள்ளும் மனிதர்களாகவே தோன்றியிருந்தனர்.
இங்கு அந்நியர் ஆதிக்கம் வேண்டாம் என்பதுதான் அடிப்படை என்றால் அது தான் விடுதலை வேண்டும் என்பது என கருத வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
அன்று அந்நியர் தமக்கெதிரான போராட்டங்களை அடக்கியொடுக்கி போராட்டங்களை நடத்தியோரை ஒதுக்கி அவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்திருந்தனர்.
அது போலவே தான் சிறிலங்கா அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டமும் அடக்கியொடுக்கப்பட்டிருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
விடுதலைப் போராட்டங்களில் நியாயத்தன்மை இருந்ததால் அந்த போராளிகளை மதிக்க வேண்டும். இலங்கை அரசாங்கமும் அவர்களை புனர்வாழ்வளித்து அவர்களின் சாதாரண இயல்பான வாழ்வுக்கு அரண் சேர்த்திருந்தது.
இயல்பு வாழ்க்கைக்கு உதவிட பொலிஸாரும் அரசு சார்பு, அரசு சார்பற்ற நிறுவனங்களும் உதவியாக செயற்பட வேண்டும் என்பது ஈழ விடுதலை ஆர்வலர்கள் சிலரது கருத்தாகவும் அமைந்தது.
மறுக்கப்படும் சுதந்திரம்
வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படும் போது விட்டில் பூச்சியும் போராடத் துடிக்கும்.
தொடர்ந்து சொல்லெனாத் துயரை தமக்குள் சுமந்த எந்தவொரு மக்கள் கூட்டமும் விடுதலைக்காக போராட தூண்டப்படும் என்பது இயற்கையானது.
அந்நியருக்கு எதிராக இலங்கையின் சிங்கள மக்களும் தமிழர்களும் போராயிருக்கின்றனர்.
அமெரிக்கர்களுக்கு எதிராக செவ்விந்தியர்கள் போராயிருக்கின்றனர். போராட்டங்களின் போது ஏமாற்றப்படுவதும் ஏமாறுவதும் மீண்டும் மீண்டும் நடந்தேறக் கூடியதே.
உரிமைகள் மறுக்கப்படும் போது அதனை பெற்றுக்கொள்ள வலுவான உரிமைப் போராட்டங்கள் தோற்றம் பெறுகின்றன.
முன்னாள் போராளிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தனிப்பட்ட காரணங்களைக் கடந்து ஈழத்தில் பொதுவான சிக்கல் நிலையைத் தோற்றுவிக்கப் போகிறது.
மீண்டும் போராடினால் தான் வாழலாம் என்ற எண்ணத்தினை அவர்கள் மனதில் ஏற்படுத்தி விடப்போகிறது.
இது ஆரோக்கியமான மாற்றங்களை தந்துவிடப் போவதில்லை என முன்னாள் அரசியல் துறைப் போராளியொருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 21 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.