ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் மீது மொட்டு கட்சி உறுப்பினர் தாக்குதல்
மஸ்கெலியா பிரதேச சபையின் உபத்தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (13.12.2021) தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில் இடம்பெற்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபை எல்லைக்குள் கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டிடங்கள் தொடர்பில் எழுந்த பிரச்சினையை மையமாகக் கொண்டே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எஸ்.ஏ. திசாநாயக்கவால் கண்ணாடி குவளையில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பிரதீபன் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் பெரியசாமி பிரதீபனின் இடது கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆரியரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த இருவருக்குமிடையிலான மோதலையடுத்து, மஸ்கெலியா பிரதேச சபைின் அமர்வுகள்
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
