இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் இந்திய கடற்றொழிலாளர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (25) அதிகாலை சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.
இந்தியப் கடற்றொழிலாளர்களின் படகை கைப்பற்ற முனைந்தபோது இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் கடற்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்பட்ட மோதலில் காயமடைந்த கடற்படை வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேரும், அவர்கள் வந்த படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |