வடமராட்சி கிழக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அட்டூழியம் - 4 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் சேதம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இந்திய இழுவை மடி படகுகள் அட்டகாசம் புரிந்து கொடுக்குளாய்-ஆழியவளை பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரின் நான்கு இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(23.11.2026 சுண்டிக்குளம்-சாலை கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ளதுடன், தற்போது கடல் பகுதி சீராக காணப்படுவதால் இலங்கை கடற்றொழிலாளர்கள் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்கின்றனர்.
4 இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம்
இவ்வாறு இருக்கையில், இதுபோன்று வலைகளை இந்திய இழுவை மடி படகுகள் அறுத்துச் செல்வதால் இலங்கை கடற்றொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், நேற்று(23) 4 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகளவான கடற்படை டோரா படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதும், தற்போது அந்த நடவடிக்கை குறைந்துள்ள காரணத்தினால் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய இழுவை மடிப் படகுகள் வளத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக இலங்கை கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதி கடற்றொழிலாளர்களின் வலைகள் இந்திய இழுவைமடி படகுகளால் நாசமாக்கப்பட்டுள்ளன.
தற்போதைய கடல் நிலைமை தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமக்கான நஷ்ட ஈட்டை பெற்றுத்தர வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தியும் முயற்சிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

