அரசின் சமூக நலன்புரி திட்டம் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு (Video)
முல்லைத்தீவில், அரசின் சமூக நலன்புரி திட்டம் கிடைக்காதவர்கள் யூன் 10ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யலாம் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (28.06.2023) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை மறித்து தங்கள் ஆதங்கத்தினை மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
சமுர்த்தி நன்மையியை அனுபவித்த மக்கள்
மேலும், அரசின் உதவித்திட்டம் தங்களுக்குக் கிடைக்கவில்லை, மக்களின் சொந்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை மற்றும் அரசின் இந்த உதவித்திட்டமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மாவட்ட செயலக
மண்டபத்திற்குள் அழைத்து சென்று, இது தொடர்பில் மக்களுக்கு அரசாங்க அதிபர் க.கனகேஸ்ரவரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 901 குடும்பங்கள் சமூர்த்தி பயனாளிகளாக இருந்தனர். அதில் 16 ஆயிரத்து 211 குடும்பங்களுக்கு சமூக நலன்புரி சபையின் நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனால் ஏற்கனவே சமுர்த்தி நன்மையினை அனுபவித்த மக்கள், மாற்று வலுவுடையவர்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமான குடும்பங்களும் விடுபட்டுள்னர்.
அவர்களிடமிருந்து மேன்முறையீட்டினை பெற்றுக்கொள்ளும் முகமாகக் கிராம அலுவலகர் அலுவலகங்களில் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேன்முறையீட்டு சபை ஆய்வு
அதேபோன்று ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் விசேட கரும பீடம் அமைக்கப்பட்டு மேன்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருப்பார்களாக இருந்தால் மேன்முறையீடுகளை மேற்கொள்ளலாம், இணையத்தளத்திலும் முறையிடலாம்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட பெயர் விபரத்தில் பல வசதியானவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது அது தொடர்பிலான ஆட்சேபனையினை பொதுமக்கள் நேரடியாகவே இணையத்தளம் ஊடாகவே தெரியப்படுத்துவதன் மூலம் மேன்முறையீட்டு சபை ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களை உள்ளீர்க்ககூடியதாக இருக்கும்.
நலன்புரி சமூக நன்மைகள் குறிப்பிட்ட வீதம் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கே கிடைக்கவுள்ளதால் தகுதியற்றவர்கள் உள்ளீர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெறும் இடத்து ஆய்வு செய்து அவர்களை நீக்கி தகுதியானவர்களை உள்ளீர்ப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.
பொலிஸ் பாதுகாப்பு
எதிர்வரும் யூன்மாதம் 10ஆம் திகதிவரை மேன்முறையீட்னை மேற்கொள்ளலாம் இன்னும் சில முறைப்பாடுகள் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
சில தகுதியான குடும்பங்கள் கூட சமூக நலன்புரி திட்டத்தில் விண்ணப்பிப்பதற்குத் தவறிவிட்டுள்ளார்கள் அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் மேன்முறையீடு செய்ய வாய்ப்புகள் இல்லா விட்டாலும் எதிர்வரும் ஆவணி மாதம் அளவில் விடுபட்டவர்களுக்கான மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நன்மை பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலக நுளைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா - கணேசபுரத்தில் மக்கள் போராட்டம்
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டப் பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா - மன்னார் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (28.06.2023) இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்டக் கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குப்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்து பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்களினால் இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வீதியினை விட்டு செல்ல மறுப்பு
வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவல வாயில் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களின் பின்னரும் எவ்வித அதிகாரிகளும் போராட்ட இடத்திற்கு வருகை தராமையினையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வவுனியா - மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த வீதியுடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்துள்ளது.
அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியினை விட்டு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவ்விடத்திற்கு வருகை தந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேன்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலதிக செய்தி - திலீபன்




















கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
